

சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு விநியோகம் செய்யப்படும் என தென்காசி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.
இதனால், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிட்டு வந்த மாணவ, மாணவிகளுக்கு அரிசி, பருப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, பள்ளிகள், தேசிய குழந்தைத் தொழிலாளர் மையங்களில் சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு தலா 3.100 கிலோ அரிசி, 1.200 கிலோ பருப்பு வழங்கப்படும்.
6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு தலா 4.650 கிலோ அரிசி, 1.250 கிலோ பருப்பு அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும்.
தென்காசி மாவட்டத்தில் இந்த உணவுப் பொருட்கள் எந்தெந்த நேரங்களில் வழங்கப்படும் என்ற விவரங்கள் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் அறிந்துகொள்ளும் வகையில் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் வாயிலாக பள்ளிகளில் ஒட்டப்படும்.
மாணவ, மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் முகக்கவசம் அணிந்து வருகை தந்து தனிமனித இடைவெளியைப் பின்பற்றி, நோய் தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக கடைபிடித்து உலர் உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு தென்காசி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.