

ஆம்பூர் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் அஸ்லாம் பாஷா உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். அவரது உடலுக்கு அரசியல் கட்சிப் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வாணக்கார கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் அஸ்லாம் பாஷா (52). இவர் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச்செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக கூட்டணியுடன் இணைந்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அஸ்லாம் பாஷா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதன்பிறகு 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினராகப் பொறுப்பு வகித்து வந்தார். அதன்பிறகு தேர்தலில் போட்டியிடாமல், கட்சிப் பணிகளை மட்டும் அஸ்லாம் பாஷா கவனித்து வந்தார்.
இந்நிலையில், உடல்நலக் குறைவால் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக அஸ்லாம் பாஷா தனது வீட்டில் ஓய்வில் இருந்தார். வீட்டில் இருந்தபடி மருத்துவச் சிகிச்சைகளை அவர் மேற்கொண்டு வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று (ஜூலை 21) காலை அஸ்லாம் பாஷா உயிரிழந்தார்.
இதையடுத்து, ஆம்பூரைச் சேர்ந்த தொழிலதிபர்கள், முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், பொதுமக்கள், நண்பர்கள், உறவினர்கள் அஸ்லாம் பாஷா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று மதியம் அவரது உடல் நீலிகொல்லை பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. உயிரிழந்த அஸ்லாம் பாஷாவுக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.