Published : 21 Jul 2020 12:06 PM
Last Updated : 21 Jul 2020 12:06 PM

கட்டுப்பாடு மிகுந்த கரோனா சோதனைச்சாவடி; விழிப்புணர்வு மிக்க பொக்காபுரம் பழங்குடிகள்!

நீலகிரி

அந்தக் காட்சியைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. அடர் காட்டுக்குள் கிடைத்த நீளமான மூங்கில்களை வெட்டிக்கொண்டு வந்து தடுப்பு போட்டிருக்கிறார்கள். அதில் மூலைக்கு மூலை மூன்று சிவப்புக் கொடிகளைக் கட்டி சோதனைச்சாவடி போல் ஆக்கியிருக்கிறார்கள். அதன் ஓர் ஓரத்தில் நடப்பதற்கும், இருசக்கர வாகனம் செல்வதற்கு மட்டும் வழி இருக்கிறது. அதை ஒட்டி நான்கடி உயரத்தில் பரண். காலை 6 மணிக்குத் தொடங்கி மாலை 7 மணி வரை தலா 5 பேர் வீதம், 3 ஷிஃப்டுகள் அங்கே அமர்ந்து காவல் காக்கிறார்கள்.

அதைக் கடந்துசெல்பவர்களை நிறுத்தி, “நீங்க வெளியூர்க்காரரா? உள்ளே வராதீங்க. உள்ளூர்க்காரரா? எதுக்கு வெளியே போறீங்க... எப்பத் திரும்பி வருவீங்க?” என்று கேட்டு கிருமிநாசினி அடித்தே அனுப்புகிறார்கள்.

ஆம். கரோனா காலத்தில் பெருநகர, மாநகர, நகர மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் இல்லாத விழிப்புணர்வை இந்த பொக்காபுரம் பழங்குடி கிராமத்தில் பார்க்க முடிகிறது.

நீலகிரி மாவட்டம் மசினகுடியை அடுத்துள்ளது சோலூர் பேரூராட்சி. இதற்குட்பட்டதுதான் பொக்காபுரம் கிராமம். இந்தக் கிராமத்தில் தொட் லிங்கி, தக்கல், குடும்பம் பள்ளம், குரும்பர் பாடி, கோவில்பட்டி உள்ளிட்ட ஐந்து சிறு கிராமங்கள் உள்ளடங்கி உள்ளன. இங்கே இருளர் சமூகத்தைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.

இங்குள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். மார்ச் மாதத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கே குவிவது வழக்கம். தவிர இந்தக் கிராமங்களைச் சுற்றி 30-க்கும் மேற்பட்ட உயர் ரக தங்கும் விடுதிகள் உண்டு. அதில் வெளியூர்க்காரர்கள் மட்டுமல்ல, வெளிமாநிலத்தவர், வெளிநாட்டவர்களும் வந்து தங்குவது உண்டு. இந்த ஊரைச் சுற்றி புலி, கரடி, சிறுத்தை, யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகம் என்பதால் அவற்றைப் பார்க்கவே பலர் இங்கு வருகிறார்கள்.

இப்படி எந்நேரமும் பரபரப்புடன் இயங்கிவந்த பொக்காபுரம், இந்த ஆண்டு மாரியம்மன் திருவிழா முடிந்த நேரத்தில் கரோனா ஊரடங்கு அறிவிக்கப்படவே மொத்தமாக முடங்கியது. அவ்வப்போது அரசு ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்தும்கூட பெரும்பாலும் யாரும் ஊரை விட்டுப் போகவில்லை. முக்கியமாக, இங்கே உள்ளிருக்கும் ஆட்கள் வெளியே போகாமலும், வெளி ஆட்கள் உள்ளே வராமலும் இருக்க போலீஸ் அனுமதியோடு மேற்சொன்னபடி செக்போஸ்ட் அமைத்துக் காவல் காக்கின்றனர். ஊரும் இதற்குக் கட்டுப்பட்டு நடக்கிறது.

இதுகுறித்து இங்குள்ள பழங்குடியினர் சங்கப் பிரதிநிதி போஜன் கூறுகையில், “இப்ப எல்லாம் முந்தி மாதிரி இல்லை எங்க ஆதிவாசி ஜனங்க. ஊருல எல்லா வீட்டுக்கும் இலவச டிவி வந்துருச்சு. அதுக்காக மின்சாரமும் கொடுத்துட்டாங்க. டிவியில நிமிஷத்துக்கு ஒரு வாட்டி இந்த வைரஸைப் பத்தி சொல்றாங்க. போதாததுக்கு எல்லோர் கையிலும் செல்போன் இருக்கு. அதுலயும் கரோனா நியூஸ்தான். அதையெல்லாம் பாத்துட்டு, நம்மளை நம்மதான் பாதுகாத்துக்கணும். நம்ம ஊரை நம்மதான் காப்பாத்தணும்னு அஞ்சு ஊரு ஜனங்களும் முடிவு செஞ்சாங்க.

ஒவ்வொரு நாளும் சாயங்காலம், காலையில மட்டும் போலீஸ் பைக்ல ரோந்து வருவாங்க. அவங்ககிட்ட அப்ப மட்டும் சொல்றதுல பயனில்லைன்னு ஊருக்கு நாமே காவல் போடுவோம்னு முடிவு செஞ்சோம். போலீஸ்கிட்டவும் சொல்லிட்டோம். பஞ்சாயத்துலயும் மருந்து கொண்டு வந்து வச்சாங்க. உள்ளூர்லயிருந்து வெளியே போகணும்னா ஆஸ்பத்திரிக்கு, வேலை வெட்டிக்குப் போகலாம். போனாலும் சாயங்காலம் திரும்ப வந்துடணும். அப்படி வந்தாலும் நல்ல உடம்பு பூரா கிருமிநாசினி அடிச்சுட்டு, கைகழுவ வச்சுத்தான் ஊருக்குள்ள விடறோம். இதுக்கு எல்லாரும் ஒத்துழைக்கிறாங்க.

இது கெடுபிடின்னு நினைக்கிறவங்க வெளி வேலைக்குப் போறதில்லை. இங்கே எல்லோருக்குமே பாட்டன், பூட்டன் வச்சுட்டுப் போன 2 ஏக்கர், 3 ஏக்கர்நிலம் இருக்குது. அதுல விவசாயம் பண்ண ஆரம்பிச்சுட்டோம். வீட்டுத் தேவைக்குப் போக மசினக்குடி, கூடலூர் கொண்டு போய் வித்துட்டும் வந்துடறோம். எதுக்குமே பெரிசா விலை கிடைக்கிறதில்லைன்னாலும் இந்தக் கிருமிலயிருந்து நம்மளை நம்மதான் காப்பாத்திக்கணும்ங்கிற எண்ணம் எல்லார்கிட்டவும் இருக்கு” என்றார்.

கிராம மக்கள் சிலர் கூறுகையில், “ஆரம்பத்துல கரோனா பற்றி பெரிசா விழிப்புணர்வு இல்லாதவங்களா எங்க ஜனங்க இருக்காங்கன்னு நினைச்சோம். ஆனா, அவங்களைவிட இந்த டூரிஸ்ட்டா வர்றவங்கதான் விழிப்புணர்வு இல்லாதவங்களா இருக்காங்க. நேத்துகூட ரெண்டு ஜீப்பு, நாலு கார்ல வந்தவங்களை உள்ளே விடாமத் திருப்பியனுப்பினோம். அப்பவும் அவங்க எங்ககூட ரகளை பண்ணினாங்க. போலீஸ்ல பிடிச்சுக் கொடுத்துடுவோம்னு மிரட்டினதுக்கு அப்புறம் காரை எடுத்துட்டுப் பறந்துட்டாங்க. ஏன்தான் அவங்க எல்லாம் இப்படி இருக்காங்கன்னு புரியலை. வெளியே வரக்கூடாதுன்னு கொஞ்சமாவது அவங்களுக்கும் யோசனை வேண்டாமா?” என்றனர்.

சென்ற வாரம் தொட்லிங்கி கிராமத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவர் இறந்துவிட்டாராம். அவர் கரோனாவில் இறக்கவில்லை என்று தெரிந்த பின்னும்கூட பஞ்சாயத்து விதிமுறைப்படி 16 பேர் மட்டுமே உடல் அடக்கத்தில் கலந்துகொண்டனராம். அத்தனை பேருமே கிருமிநாசினி பயன்படுத்தியதோடு, தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டனராம்.

நல்ல முன்மாதிரியாகத் திகழ்கிறது பொக்காபுரம் பழங்குடி கிராமம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x