

கந்த சஷ்டி கவசத்தை யூடியூப்பில் ஒரு குழுவினர் அவதூறாக விமர்சித்ததால் அது தமிழகத்தின் பரபரப்பான பேசுபொருள் ஆனது. இது முருக பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியைக் கிளப்பியிருக்கும் நிலையில், வளரிளம் பருவத்தினரிடம் கந்த சஷ்டி கவசத்தின் மேன்மையைச் சொல்லும் வகையில் அதை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் போட்டியை அறிவித்துள்ளது குமரி கிழக்கு மண்டல பாஜக.
தமிழகத்தைப் பொறுத்தவரை மாணவ - மாணவிகள் மத்தியில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தி திராவிடக் கட்சிகள் தங்கள் சித்தாந்தத்தை நிலைநிறுத்தி வருகின்றன. முரசொலி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவ - மாணவியர்க்கு பாவேந்தர் பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் வெற்றி பெறுவோருக்கு பணப் பரிசு வழங்கப்படுகிறது. மாவட்ட திமுக அலுவலகங்களிலேயே இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதேபோல் மதிமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவை இலக்கிய விழாக்கள்தான் என்றாலும் மாணவ- மாணவிகளுக்கு மத்தியில் தங்கள் கொள்கைகளையும் நிலைநிறுத்தும் முயற்சியாக இதை திராவிடக் கட்சிகள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றன.
இந்து இயக்கங்களின் சார்பில் சமய வகுப்புகள் நடத்தப்பட்டாலும் அரசியல் கட்சியாகச் செயல்படும் பாஜகவின் நேரடி தலையீடு இதில் அதிகம் இருப்பதில்லை. இந்நிலையில், கந்த சஷ்டி கவசத்தை முழுமையாக மனப்பாடம் செய்து ஒப்பிப்பவர்களுக்குப் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது பாஜக.
இன்றைய சூழலில் இப்படியொரு போட்டியை அறிவித்திருக்கும் குமரி கிழக்கு மண்டல பாஜக தகவல் தொழில்நுட்ப அணித் தலைவர் ஜனனி நாராயணன் ‘இந்து தமிழ்’ இணையத்திடம் பேசுகையில், “கந்த சஷ்டி கவசம் பக்தர்களின் உயிர் காக்கும் கவசம். போருக்குச் செல்வோருக்கு எப்படிக் கவச உடையோ அப்படித்தான் தமிழ் மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் கந்த சஷ்டி கவசம். அதை தினசரி உச்சரித்து வந்தாலே தீவினைகள் எல்லாம் ஓடிப்போகும்.
கந்த சஷ்டி கவசத்தின் மேன்மையை அடுத்த தலைமுறைக்கும் உணர்த்தும் வகையில் கந்த சஷ்டி கவச ஒப்புவித்தல் போட்டியை ஆகஸ்ட் 14-ம் தேதி நடத்துகிறோம். குமரி கிழக்கு மண்டல பாஜக தலைவர் நாகராஜனின் வழிகாட்டுதலோடு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த ஒப்புவித்தல் போட்டியில் நாகர்கோவில் மாநகரப் பகுதிக்குள் வசிக்கும் 15 வயது முதல் 30 வரையுள்ள இருபாலரும் கலந்துகொள்ளலாம். முதல் பரிசு 3 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு 2 ஆயிரம் ரூபாய். மூன்றாம் பரிசு ஆயிரம் ரூபாய். கலந்துகொள்ளும் அனைவருக்கும் காமாட்சி விளக்கும் வழங்க இருக்கிறோம்” என்றார்.