

திருச்சி காவல் சரகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதற்காக காவல் நிலையங்கள்தோறும் ‘ரேஸ்’ குழு (RACE- Rapid Action for Community Emergency) அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் 30, புதுக்கோட்டை மாவட்டத்தில் 38, கரூர் மாவட்டத்தில் 17, பெரம்பலூர் மாவட்டத்தில் 8, அரியலூர் மாவட்டத்தில் 16 என 109 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை வளாகத்தில் ‘ரேஸ்’ குழுவின் செயல்பாடுகளை, டிஐஜி ஆனிவிஜயா நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியபோது, “இக்குழுக்களில் பணியாற்றுவோர் 24 மணி நேரமும் வாக்கி-டாக்கியுடன் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். மக்களின் தகவல் கிடைத்த 15 நிமிடங்களுக்குள் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று ஆரம்பகட்ட விசாரணை மேற்கொள்வர்” என்றார்.
‘ரேஸ்’ குழுவின் செயல்பாடுகளை புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்பி பாலாஜி சரவணன், கரூர் மாவட்டத்தில் எஸ்பி பொ.பகலவன், பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்பி நிஷா பார்த்திபன், அரியலூர் மாவட்டத்தில் எஸ்பி ஸ்ரீனிவாசன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.