சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மத்திய பாதுகாப்புப் படை தேவையில்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மத்திய பாதுகாப்புப் படை தேவையில்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
Updated on
2 min read

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக் கக் கோரியும், இந்த விஷயத்தில் நீதித்துறை முட்டுக்கட்டையாக இருப்பது மற்றும் மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதைக் கண்டித்தும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான முதலாவது நீதிமன்ற அறைக்குள் அண்மை யில் வழக்கறிஞர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்.) பாதுகாப்பு அளிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் இவ்வழக்கு நேற்று மீண்டும் முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடைபெற்ற வாதம் வருமாறு:

தமிழக அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமையாஜி:

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையை உயர் பாதுகாப்பு மண் டலமாக அரசு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து காவல் துறையினரின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால், உயர் நீதிமன்றத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை தேவை யில்லை. தமிழக போலீஸின் பாதுகாப்பே போதுமானது.

தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல்:

உச்ச நீதிமன்றம் மற்றும் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் குறிப்பிட்ட அடையாள அட்டை வைத்திருப்போர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அதுபோன்ற பாதுகாப்பு முறை உயர் நீதிமன்றத்துக்கு தேவை. பேசுவதற்கும், போராடுவதற் கும் உரிமை இருந்தாலும், அதற்கு ஒரு எல்லைக் கோடு இருத்தல் வேண்டும். மேற்கண்ட சம்பவம் போல மீண்டும் நடக்கக்கூடாது.

மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத்:

உயர் நீதிமன்றத்துக்கு மத்திய பாதுகாப்புப் படை தேவையில்லை. இந்த விஷயத் தில் ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டும்.

தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல்:

பிரச்சினையை ஒப்புக் கொண்டால்தான், அதற்கான தீர்வு வரும். எல்லா விஷயத்திலும் ஒருமித்த கருத்தை உருவாக்கிக் கொண்டிருக்க முடியாது. விமான நிலையங்கள், துறைமுகங்களில் இருப்பதுபோன்ற பாதுகாப்பு முறை உயர் நீதிமன்றத்துக்கும் தேவை.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜி.ராஜகோபாலன்:

உயர் நீதிமன்றப் பாதுகாப்பு தொடர் பாக 2006-ம் ஆண்டில் இருந்து பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அவ் வாறு உத்தரவு பிறப்பித்து 3 நாட்களுக்கு உயர் பாதுகாப்பு அளிக்கப்படும். பின்னர் அதுபோல இருப்பதில்லை. உயர் நீதிமன்ற வளாகத்தில் சாமியானா பந்தல் போட்டு சாதி ரீதியான கூட்டம் நடத்துகிறார்கள். அப்போது காவல்துறையினரால் எதுவும் செய்ய முடிவதில்லை.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ்:

உயர் நீதிமன்றத் துக்கு தமிழக காவல்துறையினரின் பாதுகாப்பே போதுமானது. காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இவ்வழக் கில் என்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தலைமை நீதிபதி:

இவ்வழக்கில் வாதியாகச் சேர வேண்டாம். ஆலோசனை கூறுங்கள். அது போதும்.

அதையடுத்து தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவு:-

உயர் பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித் துள்ளார். வழக்கு விசாரணை அக்டோபர் 12-ம் தேதிக்கு தள்ளிவைக்கப் படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அரசாணை வெளியீடு

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளை ஆகியவை உயர் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், நாட்டில் உள்ள அனைத்து உயர் நீதிமன்றங்களும் உயர் பாதுகாப்பு மண்டல மாக அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மத்திய அரசு பிறப்பித்துள்ள விதிமுறைகளை கவனமாக ஆராய்ந்து அதன்படி தமிழகத்தில் உள்ள சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆகியவை உயர்பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. இதை அமல்படுத்துவது குறித்து விரைவில் பரிசீலிக்கப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in