

மதுரையில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், கரோனா பரவலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து பொதுநல வழக்கு ஒன்றை நாளைக்கு விசாரிக்கிறது.
இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பதிவாளர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:
மதுரையில் தீவிரமாக நோய்த்தொற்று பரவி வரும் சூழலில் கரோனா பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதாகவும், தாமதத்தின் காரணமாக நோய்த் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்த செய்திகளில் கரோனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு முறையான கழிவறை, படுக்கைகள் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படவில்லை. பயன்படுத்தப்பட்ட படுக்கைகளே மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு நீதிமன்றம் சில கேள்விகளையும் அதற்கான விடைகளையும் பெற விரும்புகிறது.
அதன்படி மதுரையில் கரோனா நோய்த் தொற்று பரிசோதனைகளை சுழற்சி முறையில் மேற்கொள்ளவும், சோதனைகளை துரிதமாக முடிக்கவும், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் தயாராக உள்ளார்களா? போதுமான பிசிஆர் பரிசோதனை கருவிகள் உள்ளனவா?
கரோனா பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படுவதில் ஏற்படும் தாமதத்திற்கு என்ன காரணம்? கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறும் வார்டுகள், தனிமைப்படுத்துதல் முகாம்களில் அவர்களுக்கு என்னென்ன சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன?
கரோனா சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு முறையான கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளதா? அவை தொற்று பரவாதவாறு முறையாக பராமரிக்கப்படுகின்றனவா? அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படுகிறதா?
முன்களப் பணியாளர்களாக இருக்கும் மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், பாரா மருத்துவ ஊழியர்கள் ஆகியோருக்கு தேவையான பிபிஎப் உடைகள் உள்ளனவா? கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது அல்லது எரியூட்டுவதற்காக என்ன வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது?
இந்த கேள்விகளுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை கரோனா சிறப்பு அலுவலர் சந்திரமோகன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.