

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் மூதாட்டிக்குச் சேர வேண்டிய ரூ.1.70 லட்சத்தை மோசடி செய்த ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நெக்கனாமலை புருஷோத்தமன் குப்பத்தைச் சேர்ந்த அய்யம்மாள் (66) என்பவர் கடந்த 10-ம் தேதி குடிசை வீட்டில் மகனுடன் உறங்கிக்கொண்டிருந்தபோது, கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்தது. அதில், மூதாட்டி இடிபாடுகளில் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் காயத்துடன் உயிர் தப்பினார்.
இந்நிலையில், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் அய்யம்மாளுக்கு வீடு கட்ட நிதி ஒதுக்கீடு செய்தும், அந்தப் பணத்தை ஊராட்சி செயலாளர் மோசடி செய்ததால் அய்யம்மாள் குடிசை வீட்டிலேயே கடைசி வரை வாழ்ந்து உயிரை விட்டதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதற்கிடையே, இந்த வழக்கை மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து இது தொடர்பாக அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் எனத் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருளுக்கு உத்தரவிட்டது.
இதுகுறித்து விசாரணை நடத்த திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அருண்குமாருக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டார். அதன்பேரில், நடைபெற்ற விசாரணையில், கடந்த 2017-18 ஆம் ஆண்டு பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டிக்கொள்ள அய்யம்மாள் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவுடன் ஆவணங்களை இணைத்து ஊராட்சி செயலாளர் வஜ்ஜிரவேலு என்பவர் அரசு ஒதுக்கிய ரூ.1.70 லட்சம் பணத்தை உறவினர் பெயரில் வங்கிக் கணக்கில் பெற்று மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மகேஷ்பாபு, மோசடியில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர் வஜ்ஜிரவேலுவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுபோன்ற மோசடிகளில் யாரேனும் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மகேஷ்பாபு எச்சரிக்கை விடுத்தார்.