ஊராட்சி செயலர்கள் ஒத்துழைப்பு இல்லை: சிவகங்கையில் ஊராட்சித் தலைவர்கள் ஆட்சியரிடம் அதிருப்தி

ஊராட்சி செயலர்கள் ஒத்துழைப்பு இல்லை: சிவகங்கையில் ஊராட்சித் தலைவர்கள் ஆட்சியரிடம் அதிருப்தி
Updated on
1 min read

ஊராட்சி செயலர்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என சிவகங்கை ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனிடம் அதிருப்தி தெரிவித்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் பணிகளை மேற்கொள்வதில் தெளிவான நடைமுறையைப் பின்பற்றாததால் ஊராட்சித் தலைவர்களுக்கும், ஒன்றியக் கவுன்சிலர்களுக்கும் சமீபகாலமாக மோதல் இருந்து வருகிறது.

அதேபோல் சில ஊராட்சிகளில் ஊராட்சி செயலர்கள், தலைவர்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்ற புகாரும் உள்ளது.

இந்நிலையில் சிவகங்கை ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பினர் தலைவர் மணிகண்டன், செயலாளர் கார்த்திக்கசாமி, பொருளாளர் கண்ணன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனிடம் மனு அளித்தனர்.

மேலும் அவர்கள் கூறியதாவது: தேசிய வேலையுறுதித் திட்ட பணிகள் ஊராட்சி மன்றத் தீர்மானம் மூலமே நடைபெற வேண்டும். மேலும் நிர்வாக அனுமதி வழங்கும் அதிகாரம் ஊராட்சி மன்றத்திற்கு வழங்க வேண்டும். 14-வது நிதி மானியக் குழு நிதியை பேக்கேஜ் அடிப்படையில் மொத்தமாக மாவட்ட அளவில் ஒப்பந்தம் விடுவதை நிறுத்திவிட்டு, ஊராட்சிகளிலேயே ஒப்பந்தம் விட அனுமதி தர வேண்டும்.

ஊராட்சிகளுக்கு மாநில நிதிக்குழு மானியம் வராததால், நிர்வாக செலவினங்கள் மேற்கொள்வதில் சிரமம் உள்ளது. அந்தநிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். குடிமராமத்து திட்டத்தில் நீர்நிலைகள் தூர்வாரும் பணியை ஊராட்சி மன்றங்கள் மூலமே மேற்கொள்ள வேண்டும். பல இடங்களில் ஊராட்சித் தலைவர்களுக்கு ஊராட்சி செயலர்களுக்கு ஒத்துழைப்புத் தரவில்லை. அதனை சரிசெய்ய வேண்டும், என்று கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in