

பொதுமேடைகள் மற்றும் சமூக வலைதளங்களில் வீரபாண்டிய கட்டபொம்மன் மீது அவதூறு பரப்பும் வகையில் பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட பலரையும், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருப்பூரில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம், திருப்பூர் மாவட்டம் சார்பில் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அளித்த மனு:
''தெலுங்கு சமுதாய மக்களை வந்தேறிகள் எனப் பேசி இனம் மற்றும் மொழி ரீதியிலான பிரிவினையைச் சிலர் தூண்டுகின்றனர். பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்துகின்றனர். பொது நிகழ்வுகளில் மொழி மற்றும் இன ரீதியான பிரிவினையைத் தூண்டி சாதிக் கலவரங்களுக்கு வித்திட்டு வன்முறையைத் தூண்டுகின்றனர்.
மேலும், முதல் இந்திய விடுதலைப் போரில் பங்கேற்ற, வீரபாண்டிய கட்டபொம்மனைக்கூட தெலுங்கர் என்றும் கோழை என்றும் கொள்ளைக்காரர் என்றும் பிரிவினைவாதம் பேசி, அவதூறு பரப்புகின்றனர். அவர்களின் இத்தகைய செயல்கள் தமிழகத்தில் வாழும் கோடிக்கணக்கிலான தெலுங்கு சமுதாய மக்களின் மனதை மட்டுமின்றி பெரும்பான்மைத் தமிழ்ச் சமுதாய மக்களின் மனதையும் புண்படுத்தி வருகின்றன. தேசிய அடையாளமாக விளங்குகின்ற வீரபாண்டிய கட்டபொம்மனை வந்தேறிகள் என்று சொல்வது இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும்.
இதில் சம்பந்தப்பட்ட நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்ட பலரையும், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.