

சாத்தான்குளத்தில் போலீஸார் தாக்கியதில் மரணமடைந்த வியாபாரிகளுக்கு மருத்துவச் சான்றிதழ் வழங்கிய அரசு மருத்துவரிடம், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் இன்று சுமார் 2 மணி நேரம் துறைரீதியான விசாரணை நடத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஆய்வாளர் உள்ளிட்ட 10 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் சாத்தான்குளம் போலீஸார் கைது செய்த போது அவர்களை சிறையில் அடைக்க, சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர் வினிலா மருத்துவச் சான்றிதழ் வழங்கியுள்ளார்.
எனவே, அவரிடம் குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் மற்றும் சிபிசிஐடி, சிபிஐ அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவருக்கும் மருத்துவ சான்றிதழ் அளித்தது தொடர்பாக விளக்கம் அளிக்க அவருக்கு மருத்துவ பணிகள் இணை இயக்குநர் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
மருத்துவர் வினிலா 15 நாள் விடுப்பில் சென்றுவிட்டு தற்போது மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார். இதையடுத்து தென்காசி மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் கிருஷ்ணன் இன்று காலை 11 மணியளவில் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு வந்து வினிலாவிடம் துறைரீதியான விசாரணை நடத்தினார்.
பகல் 1 மணி வரை சுமார் 2 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை அடிப்படையில் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.