Last Updated : 20 Jul, 2020 04:32 PM

 

Published : 20 Jul 2020 04:32 PM
Last Updated : 20 Jul 2020 04:32 PM

புதுச்சேரியில் எல்லா குடும்ப அட்டைதாரர்களுக்கும் மருத்துவக் காப்பீடு: வருமான உச்ச வரம்பின்றி முழு சிகிச்சை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி

புதுச்சேரியில் உள்ள அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்திராகாந்தி மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டு முழு மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். இதில் 3.4 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும். இதில் வருமான உச்ச வரம்பின்றி அனைவருக்கும் முழு சிகிச்சை அளிக்கப்படும். சுகாதாரத்துறைக்குக் கூடுதலாக ரூ. 11 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ. 9 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி இன்று தாக்கல் செய்தார். ஆளுநர் உரையின்றிப் பேரவையை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக என ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் வெளிநடப்பு செய்தன.

அதைத் தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி வரியில்லா பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.

அதன் முக்கிய அம்சங்கள்:

* வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம், இலவசக் குடிநீர் வழங்கப்படும்.
* நம்மாழ்வார் வேளாண் புத்தாக்கத் திட்டத்தினை அறிமுகப்படுத்தி நெல் உள்ளிட்ட சிறுதானியம், இதர பயிர் வகைகளுக்கு அரசு மானியம் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
* புதுச்சேரியில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
* நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டையில் வழங்கும் திட்டத்திற்காக ரேஷன் கடைகள் புத்தாக்கம் செய்யப்படும்.
* புதுச்சேரியில் பால் உற்பத்தியைப் பெருக்கி மகாத்மா காந்தி பெயரில் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு 2 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும்.
* புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்திராகாந்தி மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டு முழு மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். இதில் 3.4 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும். வருமான வரம்பின்றி அனைவருக்கும் முழு சிகிச்சை அளிக்கப்படும்.
* சுகாதாரத்துறைக்குக் கூடுதலாக ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* புதுச்சேரி மணப்பட்டு, பனித்திட்டு கடற்கரைப் பகுதிகளில் கடல் பூங்கா அமைக்கப்படும். திருச்செந்தூர், பழனி, ராமேஸ்வரம் ஆகிய ஆன்மிகத் தலங்களுக்குப் புதுச்சேரியில் இருந்து செல்ல நேரடிப் பேருந்து வசதி தரப்படும். ஆதிதிராவிடர்களுக்குத் திருமண நிதி உதவி ரூ.75 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும்.

முதல் முறை
புதுச்சேரியில் ஆளுநர் உரை இல்லாமல் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நீண்ட நாட்கள் நடக்க வேண்டிய இந்த முழுமையான பட்ஜெட் கூட்டத் தொடரானது, கரோனா நோய்த்தொற்று காரணமாக இரண்டு நாட்களுக்குள் முடித்துக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தொடரில், கரோனா‌ நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாகப் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x