

திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினராக பதவி வகித்த பொட்டு சுரேஷ்(46), 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். இவரது தந்தை எஸ்.நடராஜன் டிவிஎஸ் சதர்ன் ரோடுவேஸில் வேலை பார்த்தவர். இவரது சொந்த ஊர் போடி. தாயாரின் ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்.
இவர்களின் மூத்த மகன் என்.குமார், தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். 2-வது மகன் என்.அசோகன், மனிதநேய பாதுகாப்பு ஆர்கனைசேஷன் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். 3-வது மகன்தான் என்.சுரேஷ்பாபு என்ற பொட்டு சுரேஷ். 4-வது மகன் சரவணாஸ் ஸ்ரீனிவாசன் வழக்கறிஞராக உள்ளார்.
மதுரையில் அழகிரியின் கை ஓங்கியதும், அவர் பக்கம் ஒட்டிக்கொண்ட பொட்டு சுரேஷ் அழகிரியின் நம்பிக்கைக்குரிய 4 பேரில் ஒருவரானார். கடைசியில் அழகிரியின் தனிப்பெரும் தளபதி யாக உருவெடுத்தார். மதுரையில் எல்லா காண்ட்ராக்ட்களையும் இவரது யோகா கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனமே மேற்கொண்டது. இதுதவிர, தென்தமிழகத்தில் யார் யாருக்கு கட்சியில் பொறுப்பு வழங்குவது, காண்ட்ராக்ட் கொடுப்பது என்று எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்தார்.
பிறகு துணைவேந்தர், எஸ்.பி., ஆட்சியர் நியமனம் வரையில் அழகிரிக்கு ஆலோசனை சொல் லும் அளவுக்குப் போனதால்தான், இவரை இன்றைய வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதய குமார் ஒரு கூட்டத்தில், தென் தமிழகத்தின் அறிவிக்கப்படாத முதல்வர் என்று கூறினார். இதனால் ஆர்.பி. உதயகுமாருக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
இதற்கிடையே, அழகிரியின் வீட்டுக்குள் சென்று வரும் அளவுக்கு அதிகாரம் பெற்றிருந்த அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ் வருகைக்குப் பிறகு அந்த சலுகையை இழந்தார். கட்சியிலும் ஓரங்கட்டப்பட்டார். தன்னையும், தனது சாதியினரையும் பொட்டு சுரேஷ் ஓரங்கட்டுகிறார் என்று வெளிப்படையாகவே அட்டாக் பாண்டி விமர்சித்தார். இதனால் அவர்களுக்கிடையே கடும் பகை மூண்டது. யார் யாரைக் கொலை செய்வார்களோ என்று காவல்துறை யினரும் பதற்றத்தில் இருந்தனர்.
திமுக ஆட்சி முடிந்து அதிமுக ஆட்சிக்கு வந்ததுமே அட்டாக் பாண்டியும், பொட்டு சுரேஷும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டனர். ஆனால், அதற்கான ஆவணங்களை தயாரிப்பதில் ஏற் பட்ட குளறுபடியால், இருவருமே குண்டர் சட்டத்தில் கைது செய் யப்பட்டது செல்லாது என்று நீதிமன்றத்தில் விடுதலையானார் கள். 11.11.11 அன்று பொட்டு சுரேஷ் விடுதலையானார். அடுத்த ஒன்றேகால் ஆண்டுக்குள் கொலை செய்யப்பட்டார்.
கருத்து சொல்ல மறுப்பு
இந்நிலையில், பொட்டு சுரேஷ் கொலையில் அட்டாக் பாண்டி கைது செய்யப்பட்டுள்ளது குறித்து அவரது சகோதரர்களின் கருத்தை கேட்டோம். அண்ணன் என்.அசோ கன் கூறுகையில், “எனக்கும் சுரேஷ் பாபுவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது ” என்றார். மற்றொரு சகோதரரும் கருத்துகூற மறுத்து விட்டார். இக்கொலை பெரிய இடத்து விஷயம் என்பதால்தான் அஞ்சுவதாகக் கூறப்படுகிறது.