

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவுவது தீவிரமடைந்துள்ளதால் ஒட்டன்சத்திரம், பழநி நகரங்களில் உள்ள மொத்த காய்கறி மார்க்கெட்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் விளைவித்த காய்கறிகளை விற்பனை செய்யமுடியாத நிலையில் விவசாயிகள் இழப்பை சந்தித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி, ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது. தமிழகத்தில் பெரிய மார்க்கெட்களில் ஒன்றாக ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் உள்ளது.
இங்கு விவசாயிகள் கொண்டுவரும் காய்கறிகள் கேரளா மற்றும் தமிழகத்தின் பிறபகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று 1500-ஐ கடந்து தீவிரமடைந்து வருகிறது.
தினமும் 100-க்கும் மேற்பட்டார் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் கமிஷன் கடை உரிமையாளர், தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட கரோனா தொற்றால் காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது.
இதேபோல் பழநியிலும் கரோனா தொற்று பரவல் காரணமாக காய்கறி மார்க்கெட் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் பெரிதும் இழப்பிற்குள்ளாகியுள்ளனர். தோட்டத்தில் காய்கறிகளைப் பறித்துகொண்டு வந்தால் மார்க்கெட் மூடப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக வாங்கிச் செல்ல வியாபாரிகள் வருவதில்லை என்பதால் விற்க வழியில்லாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். சிறு வியாபாரிகள் ஓரளவு தோட்டத்திற்கே சென்று வாங்கிச் சென்றாலும் விளையும் காய்கறிகள் முழுவதுமாக விற்பனை செய்ய முடிவதில்லை.
இதுகுறித்து பழநி மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயி சக்திவேல் கூறியதாவது: பழநி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவரை, வெண்டை, முருங்கை, தக்காளி என நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் விளைவிக்கப்படுகிறது.
இவை பழநி, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்களில் விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் இரண்டு மார்க்கெட்களும் மூடப்பட்டுள்ளது. இதனால் விளைவித்த காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
பறிக்காமலேயே செடியில் விட்டுவிடும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர், என்றார்.