

ஆடி அமாவாசை தினத்தில் மூதாதையருக்கு பலிதர்ப்பணம் செய்யும் நிகழ்வு, கன்னியாகுமரி மாவட்டத்தில் மன்னர் காலத்தில் இருந்தே நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்த நாளில் ஆண்டு தோறும் குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படும். கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், தாமிரபரணி ஆறு, மற்றும் நீர்நிலைகளில் லட்சகணக்கான பக்தர்கள் கூடுவர்.
ஆனால் இந்த ஆண்டு கரோனா பாதிப்பால் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் 5 பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடுவதற்கு அனுமதி இல்லை. அதுமட்டுமின்றி கடந்த இரு வாரங்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று அதிவேகமாகப் பரவி வருகிறது.
எனவே குமரியில் இந்த ஆண்டு பலி தர்ப்பண நிகழ்ச்சிக்கு அனுமதியில்லை. பொது இடங்களில் கூடுவதைத் தவிர்த்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே அறிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து வழக்கமாக ஆடிஅமாவாசை தினத்தில் அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்படும் கன்னியாகுமரி முக்கடல் சங்கம கடற்கரை இன்று வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அங்கு வந்த சிலர் எச்சரித்து அனுப்பப்பட்டனர்.
இதைபோலவே குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும் பக்தர்கள் இல்லை. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் குமரி மாவட்டத்தில சோழன்திட்டை அணை, மற்றும் ஆறு, குளங்கள், வீட்டு முன்பு என பக்தர்கள் பலிதர்ப்பணம் கொடுத்தனர்.