Published : 20 Jul 2020 03:14 PM
Last Updated : 20 Jul 2020 03:14 PM

மாவட்டங்களில் முடங்கிப்போன விவசாயிகள் குறைதீர் கூட்டம்!- தாலுக்கா அளவிலாவது நடத்தக் கோரிக்கை

செண்பக சேகரன் பிள்ளை

கன்னியாகுமரி

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மாதந்தோறும் நடத்தப்பட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கரோனா பொதுமுடக்கத்தால் கடந்த நான்கு மாதங்களாக நடத்தப்படவில்லை. அரசுக்கும், விவசாயிகளுக்கும் பாலமாக இருந்த இந்தக் கூட்டங்கள் நடத்தாமல் இருப்பதால் தங்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வுகாண வழி தெரியாமல் விவசாயிகள் திண்டாடி வருகிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய குமரி மாவட்ட வேளாண் உற்பத்திக்குழு உறுப்பினரான செண்பக சேகரன் பிள்ளை, ''விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் எங்களது கோரிக்கைகளை நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் பேசவும், மனு கொடுத்து அதற்கு அதிகாரிகள் தரப்பில் விளக்கம் பெறவும் முடியும். இந்தக் கூட்டத்தில் வேளாண் துறை, தோட்டக் கலைத்துறை, வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மை பல்கலைக்கழக அதிகாரிகள், வேளாண் பொறியியல் துறை, கால்நடை, வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்கள் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்துகொள்வார்கள். இதன் மூலம் கோரிக்கைக்கு உடனுக்குடன் தீர்வு கிடைத்து வந்தது. விவசாயம் சார்ந்த அரசின் திட்டங்கள் பற்றியும் இந்தக் கூட்டங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு எடுத்துச் சொல்லப்பட்டது.

ஆனால், கடந்த மார்ச் மத்தியில் கரோனா வந்துவிட்டதால் அந்த மாதத்தில் இருந்தே விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் ரத்தானது. கரோனா பணிகளுக்கு மத்தியிலும் ஏப்ரல் மாதத்தில் ஆட்சியர் செல்போன் வீடியோ கால் மூலம் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். அதில் சொல்லப்பட்ட கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வும் கிடைத்தது. ஆனாலும் பல அதிகாரிகள் ஒரே இடத்தில் அமர்ந்து தீர்வு சொல்லும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் போல் வராது. கடந்த 4 மாதங்களாக கூட்டம் நடக்காததால் மனு கொடுத்து தீர்வு பெறுவதும் இயலாமல் போகிறது.

கரோனா கட்டுப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருவதால் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தை இப்போது நடத்தும் சாத்தியம் இல்லை என்றே தெரிகிறது. எனினும் அதற்கு மாற்றாக ஒவ்வொரு தாலுக்காவில் இருந்தும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் விவசாயிகளை அழைத்துக் குறைதீர் கூட்டத்தை நடத்தலாம். ஒவ்வொரு தாலுக்கா அளவிலும் இருந்து பங்கேற்கும் விவசாயிகள் அந்த தாலுக்கா முழுவதிலும் இருக்கும் விவசாயிகளைத் தொடர்புகொண்டு, அவர்களது பிரச்சினைகளைக் கேட்டறிந்து பேச முடியும்.

வழக்கமாகவே விவசாயிகள் கூட்டத்துக்குத் தொடர்ந்து வருபவர்களுக்கு ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் விவசாயிகளையும், அவர்களின் பிரச்சினைகள் குறித்தும் நன்கு புரிதல் இருக்கும். இப்போது கிராமப் பகுதிகளில் இருக்கும் விவசாயிகளிடம் அதிக அளவு கோரிக்கைகள் இருக்கின்றன. அதற்கு தாலுக்கா அளவிலான கூட்டங்கள் மூலம் தீர்வு கிடைக்கும்.

விவசாயிகள் தன்னிச்சையாக எந்த அரசு அலுவலகத்துக்குச் சென்றாலும் கரோனாவால் அதிகாரிகளைச் சந்திப்பது சவாலான விஷயமாக உள்ளது. எனவே, அரசு விதிகளின் படி குறைவான எண்ணிக்கையில் விவசாயப் பிரதிநிதிகளை அழைத்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்த வேண்டும். அப்படிச் செய்தால் விவசாயிகளின் பிரச்சினைகள் ஓரளவுக்காவது தீரும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x