

கரோனா தொற்று பரவல் அதிகரிப்பால் சங்கரன்கோவில் பகுயில் உள்ள 5 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டுள்ளன.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் சுமார் 5 ஆயிரம் விசைத்தறிக் கூடங்கள் உள்ளன. இவற்றில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், சங்கரன்கோவில் பகுதியில் உள்ள அனைத்து விசைத்தறிக் கூடங்களும் இன்று முதல் வருகிற 31-ம் தேதி வரை மூடப்படுகின்றன.
இதுகுறித்து சங்கரன்கோவில் மாஸ்டர் வீவர்ஸ் அசோசியேசன் செயலாளர் சுப்பிரமணியன் கூறும்போது, “சங்கரன்கோவில் நகர்ப் பகுதியில் கடந்த சில நாட்களாக தினமும் 60 முதல் 90 பேர் வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.
இதன் தொடர்ச்சியாக சங்கரன்கோவில் மாஸ்டர் வீவர்ஸ் அசோசியேசன் மற்றும் திருமுருகன் சிறு விசைத்தறி கூலித் தொழிலாளர்கள் சங்கம் நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இதில், சங்கரன்கோவில் பகுதியில் உள்ள 5 ஆயிரம் விசைத்தறிக் கூடங்களை ஜூலை 20 முதல் 31-ம் தேதி வரை தொழில் நிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை உற்பத்தி இழப்பு ஏற்படும்.
இருப்பினும் சங்கரன்கோவில் பகுதியில் நோய்த் தொற்றில் இருந்து நெசவாளர்களை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதேபோல், கரோனா தொற்றுப் பரவலை குறைக்கும் விதமாக விசைத்தறி நெசவாளர்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்து ஒத்துழைப்பு அளிக்கும்படி திருமுருகன் சிறு விசைத்தறி கூலி தொழிலாளர்கள் சங்க தலைவர் முத்துசங்கரநாராயணன் கேட்டுக்கொண்டுள்ளார்.