ஆடி அமாவாசை: புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்கத் தடை; போலீஸ் குவிப்பு

மணமேல்குடி அருகே கோடியக்கரை செல்லும் வழியை அடைத்ததோடு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸார்.
மணமேல்குடி அருகே கோடியக்கரை செல்லும் வழியை அடைத்ததோடு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸார்.
Updated on
1 min read

ஆடி அமாவாசையை ஒட்டி மக்கள் விரதம் இருந்து முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதற்காகத் தமிழகம் முழுவதும் நீர்நிலைகளுடன் கூடிய சிவாலயங்களில் பெருந்திரளானோர் கூடுவர். இந்நிலையில், ஊரடங்கையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் தர்ப்பணம் கொடுக்க மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை நகரில் மக்கள் அதிகம் கூடக்கூடிய பல்லவன்குளத்தின் நான்கு கரைகளிலும் புதுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தினர் ஏராளமானோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தர்ப்பணம் கொடுக்க வந்தோரைப் போலீஸார் வெளியேற்றி வருகின்றனர். இதனால் மக்கள் சோகத்தோடு திரும்புகின்றனர்.

இதேபோன்று, கிழக்கு கடற்கரைச் சாலையில் மணமேல்குடி அருகே கோடியக்கரை பகுதியில் புதுக்கோட்டை மட்டுமின்றி தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தோரும் தர்ப்பணம் கொடுப்பர்.

அரசின் தடை உத்தரவைத் தொடர்ந்து மணமேல்குடியில் இருந்து கோடியக்கரை செல்லும் வழியில் முத்துராஜபுரத்தில் தடுப்புகளை ஏற்படுத்தி மணமேல்குடி போலீஸார் ஏராளமானோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கோடியக்கரை பகுதியிலும் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆரவாரத்தோடு காணப்படக்கூடிய கோடியக்கரை பகுதியில் ஏராளமான காக்கைகள் ஏமாற்றத்தோடு காத்திருக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in