Published : 20 Jul 2020 12:18 PM
Last Updated : 20 Jul 2020 12:18 PM

6 மாவட்டங்களில் ரூ.10,399 கோடி முதலீடு: முதல்வர் பழனிசாமி முன்னிலையில் 8 நிறுவனங்கள் ஒப்பந்தம்

சென்னை

தொழில்துறை சார்பில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கோயம்புத்தூர், விழுப்புரம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 8 தொழில் நிறுவனங்கள் தங்கள் புதிய முதலீட்டுத் திட்டங்களை 10,399 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் தொடங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி முதல்வர் முன்னிலையில் இன்று நடந்தது.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“புதிய முதலீடுகளை ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்நிலைக் குழு அமைத்தது, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்திட ஏற்படுத்தப்பட்ட நாடுகளுக்கான அமைவுகள், அனுமதிகளை உடனுக்குடன் வழங்க ஒற்றைச் சாளர முறை, தமிழக முதல்வர் தலைமையிலான உயர்நிலைக் குழு எனப் பல வழிமுறைகள் ஏற்கெனவே தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன.

தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழக முதல்வர் அறிவித்துச் செயல்படுத்திய இதுபோன்ற பல திட்டங்களின் விளைவாகவும், தமிழ்நாட்டில் நிலவும் சிறப்பான தொழில் சூழலின் விளைவாகவும் தொடர்ந்து பல புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மும்பையைச் சேர்ந்த, ப்ராஜெக்ட்ஸ் டுடே (Projects Today) என்ற நிறுவனம், கோவிட் - 19 காலத்திலும், அதாவது கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில், அகில இந்திய அளவில் அதிகமான முதலீடுகளை ஈர்த்ததன் மூலம், மகாராஷ்டிரா மாநிலத்தினைப் பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு, முதலிடத்தினைப் பிடித்துள்ளது என்று தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.

மே.27 அன்று, தொழில்துறை சார்பில், ஜெர்மனி, ஃபின்லாந்து, தைவான், பிரான்ஸ், கொரியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 17 தொழில் நிறுவனங்களுடன் 15,128 கோடி ரூபாய் முதலீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. இத்திட்டங்களின் மூலம் சுமார் 47,150 நபர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

அதன் தொடர்ச்சியாக, தமிழக முதல்வர் முன்னிலையில் இன்று 8 புதிய தொழில் திட்டங்களை தமிழ்நாட்டில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. தற்போது நிலவிவரும் சூழ்நிலையின் காரணமாக, இந்த 8 திட்டங்களில், 5 திட்டங்களுக்கு நேரடியாகவும், 3 திட்டங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

இத்திட்டங்களின் விவரங்கள்:

1. காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் உள்ள இண்டோஸ்பேஸ் தொழிற் பூங்காவில், Vikram Solar நிறுவனம், 5,423 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 7,542 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Solar Cells & Modules உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். இதுவரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த Solar Cell மற்றும் Module, இத்திட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட உள்ளன.

2. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில், 250 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 1,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், CGD Sathrai Pvt Limited நிறுவனத்தின், தொழிற்பூங்கா திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

3. கோயம்புத்தூர் மாவட்டத்தில், 200 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Aquasub நிறுவனத்தின் Ductile Iron Foundry திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

4. ராணிப்பேட்டை மாவட்டத்தில், 200 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், NDR Infrastructure நிறுவனம், 125 ஏக்கர் பரப்பளவில் அமைக்க உள்ள தொழிற் பூங்கா திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

5. விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் 36 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 465 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், GI Agro Tech நிறுவனத்தின் முந்திரி பதப்படுத்தும் (Cashewnut Processin) திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

6. செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் – ஒரகடம் நெடுஞ்சாலையில், 4,000 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 2,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Hiranandani குழுமத்தைச் சேர்ந்த Yotta நிறுவனத்தின் தகவல் தரவு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

7. கோயம்புத்தூர் மாவட்டத்தில், 250 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ELGI Equipments நிறுவனத்தின் Air Compressors உற்பத்தி புரிந்துணர்வு ஒப்பந்தம்.

8. ஈரோடு மாவட்டம், சிப்காட் பெருந்துறை தொழிற்பூங்காவில், 40 கோடி ரூபாய் முதலீட்டில், , JS Auto Cast நிறுவனத்தின் Foundry விரிவாக்கத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

என மொத்தம், 8 திட்டங்களின் மூலம் 10,399 கோடி ரூபாய் முதலீடுகள் மற்றும் சுமார் 13,507 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம் தொழில்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்”.

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x