

சோலைவனத்தைக் கூடச் சிலர் குப்பை மேட்டைப் போல வைத்திருப்பார்கள். ஆனால், குப்பைமேட்டையே சோலைவனமாக மாற்றியிருக்கிறார் ஒரு தூய்மைப் பணியாளர்.
வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் தினக்கூலி அடிப்படையில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றுகிறார் பரமேஸ்வரி. அவரது கணவரும் அதே வேலையில்தான் இருக்கிறார். இருவரும் வெளியூர்க்காரர்கள் என்பதால் வாடகை வீட்டில் தங்கிக் கொண்டு வேலை பார்த்தனர். ஆனால் இவர்கள் வாங்கும் சொற்ப சம்பளத்தில் வீட்டு வாடகை கொடுத்துக் கட்டுப்படியாகவில்லை. அதனால் குப்பைக் கிடங்கிலேயே ஓர் ஓரமாகக் தங்கிக்கொள்ள, பேரூராட்சிச் செயல் அலுவலரிடம் அனுமதி கேட்டனர். குப்பைக் கிடங்குக்கும் காவலர் ஒருவரை நியமனம் செய்ய வேண்டி இருந்ததால் இவர்களையே அங்கு குடியிருக்க அனுமதித்து குப்பைக் கிடங்கின் காவலராகப் பணிபுரியவும் செயல் அலுவலர் அனுமதித்தார்.
குப்பைகள் பிரிக்கும் அந்தக் கிடங்கு 'வளம் மீட்புப் பூங்கா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இங்கே குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு இயற்கை உரம் தயாரிக்கப் படுகிறது. வைத்தீஸ்வரன் கோயில் பகுதி விவசாய நிலங்கள் அதிகமுள்ள பகுதி. அதனால் பரமேஸ்வரிக்கும் விவசாயத்தில் ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், வீட்டு வாடகைக்கே வழியில்லாத நிலையில் விவசாய நிலத்துக்கு எங்கே போவது என்று நினைத்து முடங்கிப் போனார்.
"ஏதாவது பயிர் சாகுபடி செய்யலாம்னு ஆசை. ஆனா ஆசைப்பட்டா மட்டும் போதுமா? அதுக்கெல்லாம் ஒரு பொசுப்பு வேணுமே. விதிய நினைச்சு விருப்பத்தை அடக்கிக்கிட்டேன். ஒரு நாள் இப்படி படுத்துகிட்டு இந்த இடத்தையே வெறிச்சுப் பார்த்துக்கிட்டிருந்தேன். அப்பதான் மின்னலா ஒரு யோசனை தோணுச்சு. இங்கே காலியாகக் கிடக்கும் இடத்தை விவசாயத்துக்குப் பயன்படுத்தினால் என்னான்னு தோணுச்சு. மறுநாள் வேலை முடிஞ்சு வந்ததும் உடனடியாகக் களமிறங்கிட்டேன்" என்கிறார் பரமேஸ்வரி.
முதலில் குப்பை மேட்டின் ஒரு பகுதி நிலத்தை மண் வெட்டியால் சமன்படுத்தி பக்குவப்படுத்தினார் பரமேஸ்வரி. அதில் என்ன சாகுபடி செய்யலாம் என யோசித்தவர் தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் சோளத்தை வாங்கி வந்து விதைத்திருக்கிறார். அலுவலகப் பணி நேரம் போக மீத நேரத்தில், அதைக் கண்ணும் கருத்துமாக நீர்விட்டுப் பராமரித்தார் பரமேஸ்வரி. இவரது ஆர்வத்தால், குப்பை மேடாகக் கிடந்த அந்த இடம் இப்போது சோளக் கொல்லையாகக் காட்சியளிக்கிறது.
தூய்மைப் பணியாளரின் இந்த விவசாய ஆர்வத்தைப் பாராட்டிய பேரூராட்சி செயல் அலுவலர் கு.குகன், பரமேஸ்வரிக்கு மின்விசிறி ஒன்றைப் பரிசாக வழங்கி இருக்கிறார். அடுத்ததாக சோளக் கொல்லைக்குள் ஊடு பயிர் எதையாவது பயிர் செய்யும் யோசனையில் இருக்கிறார் பரமேஸ்வரி.