

மதுரையில் தாய் மனநலம் பாதிக்கப்பட்டு நிரந்தர நோயாளியாக படுக்கையில் சிகிச்சை பெறும்நிலையில் டீ கடையில் பணிபுரியும் தந்தையின் பராமரிப்பில் வளர்ந்த இரட்டையர் மாணவர்கள், 12-ம் வகுப்புத் தேர்வில் சாதனை புரித்துள்ளனர்.
மதுரை சந்தைப்பேட்டையில் ஒரு சிறிய வாடகை வீட்டில் வசித்து வருபவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி, நீண்ட நாளாக நோய்வாய்ப்பட்டு படுத்தப்படுக்கையில் சிகிச்சை பெறுகிறார். ராதாகிருஷ்ணன், டீ கடை ஒன்றில் பணிபுரிகிறார். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
மூத்த மகள் மாலா அரசுக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். அடுத்ததாக பிறந்த மீனாட்சி, சுந்தரராஜபெருமாளும் இரட்டையர்கள். சுந்தராஜ பெருமாள், விருதுநகர் இந்து நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் பாடப்பிரிவில் படித்து வந்தார். மீனாட்சி அதே நிர்வாகத்தின் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் பாடப்பிரிவு எடுத்து ப்ளஸ்-டூ படித்து வந்தார். இருவரும் தமிழ்வழிக் கல்வியில் படித்தனர். ராதாகிருஷ்ணனின் உழைப்பில் மனைவியின் மருத்துவமும், பிள்ளைகள் படிப்பும் தட்டுத்தடுமாறி சென்று கொண்டிருக்கிறது.
வறுமை, தாயின் நோய் என எத்தகைய சோதனைகள் இருந்தாலும்கூட நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் சுந்தரராஜ பெருமாள், 600-க்கு 532 மதிப்பெண்ணும் மீனாட்சி 559 மதிப்பெண்ணும் எடுத்துள்ளனர்.
சுந்தரராஜப் பெருமாள், நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறார். மீனாட்சிக்கு, கலை அறிவியல் கல்லூரியில் படித்து ஆடிட்டராக வேண்டும் என்பது விருப்பமாம். ஆனால், ராதாகிருஷ்ணன், தன்னுடைய அன்றாட வருமானம் குடும்பத்தை நடத்துவதற்கே போதுமானதாக இல்லை என்பதால் தனது குழந்தைகளின் எதிர்காக்ல கனவை எப்படி நிறைவேற்றுவது என்று திக்குத் தெரியாமல் கலங்கி நிற்கிறார்.
இதே மாணவர்கள், பத்தாம் வகுப்புத் தேர்விலும் அதிக மதிப்பெண் எடுத்து சாதனைப்புரிந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மழை பெய்தால் ஒழுகும் வீடு, புத்தகங்கள் வைக்கூட இடம் இல்லாத வீடு என மிக ஏழ்மையான குடும்பப் பின்னணியில் பிறந்து வளர்ந்து படித்தஇந்த இரட்டையர்களின் சாதனையை பள்ளி நிர்வாகமும், அவர்கள் பகுதி மக்களும் பாராட்டி வருகின்றனர்.