அம்மா மாளிகை, அடுக்குமாடி வாகன நிறுத்தம் திறப்பு: ரூ.123 கோடியில் மாநகராட்சி பணிகளை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

அம்மா மாளிகை, அடுக்குமாடி வாகன நிறுத்தம் திறப்பு: ரூ.123 கோடியில் மாநகராட்சி பணிகளை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
Updated on
2 min read

அடுக்குமாடி வாகன நிறுத்தம், அம்மா மாளிகை, பூங்காக்கள் உட்பட சென்னை மாநகராட்சி சார்பில் 44 புதிய திட்டப் பணிகளை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை வளாகத்தில் ரூ.39 கோடியே 10 லட்சத்து 79 ஆயிரம் செலவில் ‘அம்மா மாளிகை’ கட்டப்பட்டுள் ளது. இதை முதலவர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்று திறந்துவைத்தார்.

சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடியில் 5 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள அம்மா மாளிகை, 800 அலுவலர்கள் பணிபுரியும் வசதி கொண்டது. 500 இருக்கைகள் கொண்ட அரங்கம், 100 இருக்கைகள் கொண்ட ஆலோசனைக் கூடம், தரை தளத்தில் 50 நான்கு சக்கர வாகனங்கள், 200 இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மாநகராட்சியின் மழைநீர் வடிகால், சாலைகள், பாலங்கள், சிறப்பு திட்டங்கள், இயந்திரம், திடக்கழிவு மேலாண்மை, மின்சாரம், மாவட்ட குடும்ப நலம், சட்டக் குழுமம், வருவாய், கல்வி, தேர்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இனி அம்மா மாளிகையில் செயல்படும்.

சென்னையில் முதல்முறையாக ஆயிரம் விளக்கு பகுதி வாலஸ் தோட்டம் முதல் சாலையில் ரூ.43 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தானியங்கி அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தையும் காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்துவைத்தார்.

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 26,877 சதுர அடி நிலத்தில் ரூ.11.25 கோடியில் வடிவமைப்பு, கட்டுதல், இயக்குதல் மற்றும் ஒப்படைத்தல் என்ற முறையில் அப்பல்லோ ஆஸ்பிட்டல் எண்டர்பிரைசஸ் லிமிடெட், இந்த வாகன நிறுத்துமிடத்தை கட்டியுள்ளது. 7 தளங்களில் 249 நான்கு சக்கர வாகனங்கள், 230 இருசக்கர வாகனங்களை இங்கு நிறுத்தலாம். இதன்மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரு.46 லட்சம் வாடகையாக கிடைக்கும்.

இதுதவிர சென்னை மாநக ராட்சியில் அறிவிக்கப்பட்டிருந்த 4 உண்டு உறைவிடப் பள்ளிகள், 4 சமுதாய நலக்கூடங்கள், 21 பூங்காக்கள், 2 வார்டு அலுவல கங்கள், பள்ளி அறிவியல் பரிசோதனைக் கூடம், 6 ஆயிரத்து 630 எல்இடி விளக்குகள், ஹால்ஸ் சாலைக்கு தமிழ்ச் சாலை என பெயர் மாற்றம் உள்ளிட்ட ரூ.123.75 கோடி செலவிலான 44 திட்டப் பணிகள் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், மேயர் சைதை துரைசாமி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் க.பனீந்திர ரெட்டி, குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் பி.சந்திர மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வாகன நிறுத்துமிடம் திறப்பு விழாவில் அப்பல்லோ மருத்துவமனைகளின் தலைவர் பிரதாப் சி ரெட்டி, மேலாண்மை இயக்குநர் சுனிதா ரெட்டி, புதிய முயற்சிகள் தலைவர் சத்யநாரா யணா ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in