

திருமழிசை சந்தையில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் சந்தை நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளை எதிர்த்தும், சந்தையை கோயம்பேட்டுக்கு மாற்ற கோரியும் காய்கறி வாங்க வந்த சில்லறை வியாபாரிகள் நேற்று இரவு திருமழிசை சந்தையில் போராட்டம் செய்தனர்.
கோயம்பேடு சந்தை கடந்த மே 5-ம் தேதி மூடப்பட்டு திருமழிசையில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. தற்போது திருமழிசை சந்தைக்கு வரும் சரக்கு வாகனங்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. நேற்று முழு ஊரடங்கு காரணமாக சந்தைக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் நேற்று இரவு அதிக அளவில் சில்லறை வியாபாரிகள் இச்சந்தையில் குவிந்தனர்.
சந்தை நிர்வாகம், சந்தையில் சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏதுவாக 200, 200 வாகனங்களாக பிரித்து சந்தைக்குள் அனுமதிக்கிறது. அதனால் சரக்கு வாகனங்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
இதனால் காய்கறிகளை இரவில் வாங்கிச் சென்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், செங்கல்பட்டு, சோழிங்கநல்லூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரத்தோடு கொண்டுபோய் சேர்க்க முடியவில்லை.
இந்நிலையில், சந்தை நிர்வாகத்தின் கெடுபிடியை கண்டித்தும், தொற்று குறைந்து வரும் நிலையில் சந்தையை மீண்டும் கோயம்பேட்டுக்கு மாற்ற வலியுறுத்தியும் சில்லறை வியாபாரிகள் நேற்று திருமழிசை சந்தையில் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.