

மதுரையில் இளைஞர் ஒருவரைத் தாக்கி பணம் பறிக்க முயன்றதாக நகர் டெல்டா போலீஸார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மதுரை உலகநேரியைச் சேர்ந்த அரவிந்தராஜ்(28), புதூர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:
உயர் நீதிமன்றக் கிளை அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்றேன். அங்கிருந்த டெம்போ (டிஎன் 59 ஜி 0840) வேனில் இருந்து இறங்கிய சீருடை அணியாத 5 பேர், ‘நீ யார்?' எனக் கேட்டனர்,
பாஸ்கரன் மதுரம் என்கிற வழக்கறிஞரிடம் ஓட்டுநராக இருப் பதாகக் கூறினேன். அவர்களில் ஒருவர் ரூ.2,000 கேட்டார். பணத்தை கொடுக்காவிட்டால் வழக்கு தொடர்ந்து சிறையில் அடைப்போம் என மிரட்டினார்.
பின்னர், அவர்கள் என்னை வேனில் ஏற்றினர். அங்கு சீருடையில் இருந்த போலீஸ்காரரும் பணம் கேட்டு தாக்கினார். தலை, மார்பு, முகம் ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. பிறகு வேனில் அழைத்துச் சென்று பாண்டி கோயில் அருகே இறக்கிவிட்டனர். இதை வெளியில் சொன்னால் கஞ்சா வழக்கு தொடருவோம் எனவும் மிரட்டினர்.
என்னை தாக்கிய காட்சிகள் மதுக் கடை அருகே உள்ள கடையின் சிசிடிவியில் பதிவாகி யுள்ளது. என்னைத் தாக்கியது நகர் டெல்டா போலீஸ் படை (5) எனத் தெரிந்தது. மதுரை அரசு மருத்துவமனையில் எனக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. என்னைத் தாக்கி, பணம் கேட்டு மிரட்டிய டெல்டா போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து புதூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
மதுரை செல்லூர் பாலத்தில் ஓராண்டுக்கு முன், டெல்டா போலீஸார் தாக்கியதில் சிம்மக்கல் வியாபாரி ஒருவர் இறந்ததாகக் குற்றச்சாட்டு உள்ள நிலையில், மீண்டும் இளைஞர் ஒருவரை டெல்டா படையினர் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது.