

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள இந்திய தேயிலை வாரியம் சார்பில், தேயிலை தர மேம்பாடு, அதிக விலை பெற்று தருவதற்கான மாதிரி திட்டம் குறித்த செயல் விளக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
தேயிலை வாரிய செயல் இயக்குநர் எம்.பாலாஜி பேசும்போது, ‘தேயிலை வாரியம், பெங்களூரு இந்திய மேலாண்மை நிறுவனம் ஆகியவை இணைந்து மின்னணு ஏல முறை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் ஒழுங்கு முறை சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்தன. இதில், ஜப்பானிய முறைப்படி தேயிலை ஏலத்தில் சீர்திருத்தம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொள்முதல் அடிப்படையில் கோரப்படும் விலை, நேரத்தின் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்படும்.
வாங்குபவர்களும், விற்பவர்களும் வெளிப் படையான முறையில் பங்கேற்கலாம். கொள்முதல் செய்யும் அனைவருக்கும் சமமான வாய்ப்பு உறுதி செய்யப்படும். பொது ஏலத்தில் தரத்தை உறுதி செய்து, சராசரி விலை அதிகம் பெற்றுத்தர வழிவகுக்கும். இது, நாட்டில் உள்ள மற்ற ஏல மையங்களிலும் அமல்படுத்தப்படும்’ என்றார்.