

இன்றைய தலைமுறையினருக்கு நாடகம் என்றாலே டி.வி. சீரியல் மட்டுமே நினைவுக்கு வரும். உண்மையில் நாடகம் என்றால் திரைப் படத் துறைக்கு முன்னோடியாக விளங்கிய மேடை நாடகங்களைத் தான் குறிக்கும் எனலாம்.
ஆரம்பகால தமிழ் சினிமா வில் முத்திரை பதித்த பலரும், மேடை நாடகங்களால் பட்டை தீட்டப்பட்டவர்களே. ஆனால் இன் றைக்கு நிலைமை அப்படியில்லை. மேடை நாடகம் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது என்பதே எதார்த்த உண்மை.
இச்சூழ்நிலையில் மேடை நாட கங்களை அடுத்த தலைமுறையான பள்ளி மாணவர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதோடு, அதற்கான முயற்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறார் திருச்சி, சிந்தாமணியைச் சேர்ந்த நாடக நடிகரும், ஒப்பனைக் கலை ஞருமான வி.பி.சி.சேகர் (59).
19 வயதில் முதன் முதலாக மேடை ஏறியவர், திருச்சி தேவர் ஹால், ஆர்.ஆர்.சபா உட்பட தமி ழகம் முழுவதும் பயணித்து பல் வேறு அரங்குகளில் 3 ஆயிரத் துக்கும் அதிகமான புராண, சரித் திர, சமூக விழிப்புணர்வு நாடகங் களில் நடித்துள்ளார். தற்போது முழு நேரமாக பள்ளி, கல்லூரி விழா மேடைகளில் அரங்கேறும் நாடகங்களை வடிவமைத்து நடிப் பவர்களுக்கு மேக்கப் போடுவது டன், உடை, உபகரணங்களும் வழங்கி வருகிறார்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் வி.பி.சி.சேகர் கூறியதாவது:
நான் கலைத் துறையை பின்புல மாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல. சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் 1975-ல் இத்துறைக்கு வந்தேன். அப்போதைய காலகட் டத்தில் மேடை நாடகங்கள் நல்ல பெயரை வாங்கித் தந்ததுடன் குடும் பத்தை காப்பாற்றும் அளவுக்கு வருமானத்தையும் தந்தது.
1990-க்குப் பின் சினிமா மற்றும் டி.வி. சேனல்களின் அசுர வளர்ச் சியால் புராண, சரித்திர நாடகம் போடுவது குறையத் தொடங்கியது. வருமானத்துக்கு மாற்று ஏற்பாடாக நாடக நடிகர்களுக்கு மேக்கப் போடும் ஒப்பனைக் கலைஞர் கணேசனிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். அவர் மறைவுக்குப் பின் நடிப்பதுடன், மேக்கப் போடும் பணியும் செய்துவந்தேன்.
இன்றைக்கு முக்கிய அரங்கு களில் கூட வருடத்துக்கு ஒன்றி ரண்டு புராண, சரித்திர நாடகங்கள் போட்டாலே பெரிய விஷயம் என்ற நிலை வந்துவிட்டது. அப்படியே நடைபெறும் சில சமூக விழிப்புணர்வு நாடகங்களும் விளம்பரதாரர் வழங் கும் பணத்தில்தான் நடைபெறுகி றது.
திருச்சியில் அவ்வப்போது நடைபெறும் நாடகங்களுக்கும் டிக்கெட் கிடையாது. பார்வையாளர் கள் வந்தாலே போதும் என்ற நிலை தான் உள்ளது. நடிகர்களுக்கு ரூ.500 தான் சம்பளம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நடிப்பதால் ஏற் படும் மனநிறைவுக்காகவே பலரும் இன்றைக்கு இத்தொழிலில் இருக்கின்றனர்.
இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பே நான் அடுத்த கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டேன். பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும் ஆண்டு விழா மேடையில் கண்டிப் பாக ஒரு சரித்திர நாடகம் இடம் பெறும். பள்ளி, கல்லூரிகளுக் குச் சென்ற புராண, சரித்திர நாடகம் இயற்றுவது, நடிப்பது குறித்து மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து, அந்தந்த கதாபாத்திரத் துக்கு தேவையான உடை, உபகரணங்கள் வழங்குவதுடன், மேக்-அப்பும் செய்து விடுவேன்.
குருதியில் ஊறிய கலை
இதில் ஓரளவு வருமானம் கிடைப் பதுடன், அடுத்த தலைமுறையின ருக்கு இக்கலை குறித்து எடுத்துச் சொல்லும் வாய்ப்பும் கிடைக்கிறது. கடந்த 40 ஆண்டுகளாக நாடகமே உலகம் என்று வாழ்ந்துவிட்ட எனக்கு தற்போது ஆசிரியர்கள் மூலம் மாணவர்கள் அளிக்கும் பணமே இப்போதைக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது என்று கூறினார். தொடர்ந்து வருமானம் இல்லாததால் நாடகத் துறையை விட்டு ஒதுங்கியிருக்கும் நடிகர்கள் இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டு, நம் குருதியில் ஊறிய இக்கலையை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும்” என்கிறார் வி.பி.சி.சேகர்.