வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடின; தமிழகம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு- மழையால் வீடுகளில் மக்கள் முடங்கினர்

பட்டினப்பாக்கம் கடற்கரை சாலையில் தனது செல்லப் பிராணி மழையில் நனையாமல் தடுக்க குடை பிடித்தபடி அழைத்துச் செல்லும் சிறுமி.
பட்டினப்பாக்கம் கடற்கரை சாலையில் தனது செல்லப் பிராணி மழையில் நனையாமல் தடுக்க குடை பிடித்தபடி அழைத்துச் செல்லும் சிறுமி.
Updated on
1 min read

கரோனா பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் 3-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. காலை முதல் மழை பெய்ததால் மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

தமிழகத்தில் ஜூலை 31-ம்தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், மக்கள்அதிகம் கூடுவதைத் தவிர்க்க,அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழுஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி 3-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

சென்னையில் மருந்து கடைகள் தவிர்த்து அனைத்து கடைகளும் நேற்று மூடப்பட்டிருந்தன. மாநகரில் 193 இடங்களில் போலீஸார் சோதனை சாவடிகள் அமைத்து, அத்தியாவசிய காரணங்கள் இன்றி வாகனங்களில் சுற்றியவர்கள் மீதுவழக்கு பதிவு செய்தனர். போலீஸாரின் தீவிர கண்காணிப்பால், முக்கிய சாலைகள் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

இதேபோல் அனைத்து மாவட்டங்களிலும், தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டது. அனைத்து நகர்புறங்களிலும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

இதற்கிடையே, சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலையில் பெய்யத் தொடங்கிய மழை பிற்பகல் வரைநீடித்தது. இதனாலும் மக்கள் நடமாட்டம் வெகுவாகக் குறைந்தது.

வரும் ஞாயிற்றுக்கிழமையும் இதுபோல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு தமிழகம் முழு வதும் அமல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in