கிரானைட் முறைகேடு விசாரணை நிலை: பேரவையில் பேச அனுமதி மறுத்ததால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

கிரானைட் முறைகேடு விசாரணை நிலை: பேரவையில் பேச அனுமதி மறுத்ததால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
Updated on
1 min read

சகாயம் மேற்கொண்டு வரும் கிரானைட் முறைகேடு விசாரணை, சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து பேச அனுமதிக்காததால், சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சிகள் திங்கள்கிழமை வெளிநடப்பு செய்தன.

சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் பேரவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, ஒரு பிரச்சினை குறித்து பேச அனுமதி கேட்டார். அதற்கு பேரவைத் தலைவர் பி.தனபால் அனுமதி மறுத்துவிட்டார்.

இதையடுத்து, மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். இதேபோல, பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச அனுமதி அளிக்காததைக் கண்டித்து மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

பேரவைக்கு வெளியே நிருபர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறும்போது, "கடந்த 9, 10-ம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று திமுக ஏற்கெனவே வலியுறுத்தி வருகிறது. பல்வேறு கட்சிகளும் இந்த கோரிக்கையை வைத்துள்ளன.

இந்த மாநாடு மூலம் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு வந்திருப்பதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். எந்தெந்த நாட்டில் இருந்து எவ்வளவு முதலீடு வந்தது, எத்தனை தொழிற்சாலை அமைக்கப்படும், எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது பற்றிய விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

இதுகுறித்து பேச அனுமதி கேட்டேன். ஆனால், பேரவைத் தலைவர் மறுத்துவிட்டார். கிரானைட் முறைகேடு குறித்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் நடத்தி வரும் விசாரணை பற்றி பேசவும் அனுமதி கேட்டோம். அதற்கும் அனுமதி வழங்கவில்லை. இதனால், வெளிநடப்பு செய்தோம்" என்றார் ஸ்டாலின்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த முழு விவரங்களை வெளியிடுவது, ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மேற்கொண்டு வரும் கிரானைட் குவாரிகள் விசாரணை உள்ளிட்டவை குறித்து பேரவையில் பேச அனுமதிக்காததால் வெளிநடப்பு செய்ததாக மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் புதிய தமிழகம் உறுப்பினர் கிருஷ்ணசாமி ஆகியோர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in