கோவையில் கோவில்கள்மீது தாக்குதல்!இது மதவெறி அரசியலுக்குத் துணைபோகும் செயல்- விசிக கண்டனம்

கோவையில் கோவில்கள்மீது தாக்குதல்!இது மதவெறி அரசியலுக்குத் துணைபோகும் செயல்- விசிக கண்டனம்
Updated on
1 min read

மதத்தின் பெயரால், சாதியின்பெயரால், திட்டமிட்டே சமூகப் பதற்றத்தை உருவாக்கும் கும்பல்மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

“அண்மையில் தந்தை பெரியாரின் சிலைகள் கோவை, திருக்கோயிலூர் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து அவமதிக்கப்பட்டன. கோவையில் பெரியார்சிலையின் மீது காவிச்சாயத்தை ஊற்றியதன்மூலம் தமது அடையாளத்தையும் அக்கும்பல் அம்பலப்படுத்திக் கொண்டது. அவ்வப்போது புதிதாக முளைத்துவரும் ஒருசில காளான்கும்பலைப் பயன்படுத்தி இதுபோன்ற நடவடிக்கைகளை சனாதன சக்திகள் தூண்டி வருகின்றனர்.

மதவாதிகளின் வெறுப்பு அரசியலில் சிக்கி உழலும் இளைஞர்கள் இத்தகைய தூண்டல்களுக்கு இலகுவாக இரையாகின்றனர். நெருங்கிவரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காகத்தான் சிலர் இதுபோன்ற பதற்றத்தைத் திட்டமிட்டே உருவாக்குகிறார்கள் என்பதை அறியாத இளைஞர்கள் இதற்குப் பலியாகின்றனர்.

பெரியார் மற்றும் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் மதத்தின் பெயரால் நடக்கும் மோசடிகளையே அம்பலப்படுத்தினர். அவர்கள் ஒருபோதும் ஒட்டுமொத்த இந்துச் சமூகத்துக்கும் எதிரான வெறுப்பை விதைக்கவில்லை. இதனை இன்றைய இளந்தலைமுறையினர் உணர்ந்துகொள்ள வேண்டும்.

இந்நிலையில், இன்று காலை கோவையில் மூன்று இடங்களில் இந்துக்கோவில்களைச் சேதப்படுத்தும் நடவடிக்கைகளில் சில மக்கள்விரோத சக்திகள் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தப்போக்கு மதவெறியர்களுக்கு எதிரான நடவடிக்கையாக எந்நிலையிலும் அமையாது. இது, இந்துக்கள் மற்றும் இந்து அல்லாதவர்கள் என சமூகத்தை- உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்தத் துடிக்கும் சனாதன சக்திகளுக்கு ஆதரவான செயற்பாடுகளாகவே அமையும். மேலும், இது உழைக்கும் இந்துமக்களைக் காயப்படுத்துவதாகவும் அமையும்.

எனவே, கோவில்களைச் சேதப்படுத்திய மக்கள்விரோத நடவடிக்கைகளை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதில் ஈடுபட்டவர்கள் மட்டுமின்றி இதன் பின்னணியில் உள்ள அனைவரையும் அரசு கைது செய்யவேண்டும்.

மதத்தின் பெயரால், சாதியின்பெயரால், திட்டமிட்டே சமூகப் பதற்றத்தை உருவாக்கும் கும்பல்மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ” என்று கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in