வனப் பகுதியில் அத்துமீறும் இளைஞர்களால் பாதிக்கப்படும் விலங்குகள்; நடவடிக்கை எடுக்க திமுக எம்எல்ஏ வலியுறுத்தல்

நா.கார்த்திக் எம்எல்ஏ
நா.கார்த்திக் எம்எல்ஏ
Updated on
1 min read

கோவை மாவட்டம் நரசிபுரம் ஜவ்காடு வனச்சரகப் பகுதியில் அத்துமீறி மது அருந்தும் இளைஞர்களால் யானை உள்ளிட்ட வன விலங்குகள் பாதிக்கப்படுகின்றன. அத்துமீறலில் ஈடுபட்டதுடன், வனத் துறைப் பணியாளரைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கோவை மாநகர் கிழக்கு திமுக மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ கூறியதாவது:

"தொண்டாமுத்தூர் அடுத்த நரசிபுரம் ஜவ்காடு பகுதியில் இளைஞர்கள் நால்வர் மது அருந்தியுள்ளனர். அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வனக் காப்பாளர், 'வனப்பகுதியை ஒட்டிள்ள இடத்தில் மது அருந்தக்கூடாது, யானைகள் நடமாடும் பகுதிகள் என்பதால் கீழே வீசப்படும் கண்ணாடி பாட்டில்களால் யானை உள்ளிட்ட வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும்' என்று தெரிவித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், மது போதையில் வனக்காப்பாளரைத் தாக்கியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிய வனக் காப்பாளர், அருகிலிருந்த விவசாயிகளை உதவிக்கு அழைத்துள்ளார். அங்கு வந்த விவசாயிகள், இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, அந்த இளைஞர்கள் விவசாயிகளையும் தாக்க முற்பட்டுள்ளனர்.

இதையடுத்து அங்கு திரண்ட மக்கள், இளைஞர்கள் நால்வரையும் பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களது காரும் பூலுவம்பட்டி வனச்சரக அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அந்த இளைஞர்கள் வடவள்ளியைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஆளுங்கட்சிப் பிரமுகருக்கு நெருக்கமானவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால், நடவடிக்கை மேற்கொள்ள வனம், காவல் துறை உயரதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேரிடர் காலத்தில் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து, குடிபோதையில் அவர்களைத் தாக்கி, அத்துமீறிய இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுபோன்ற இளைஞர்கள் வீசும் பாட்டில்களால் வனப் பகுதியில் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் பாதிக்கப்படுகின்றன. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும்"

இவ்வாறு நா.கார்த்திக் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in