

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூன் மாதம் 30-ம் வரை கரோனாவால் 174 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். 3 பேர் உயிரிழந்திருந்தனர்.
அதன் பிறகு இம்மாதத்தில் நேற்று (ஜூலை 18) வரை 941 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளித்து வரும் புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சுமார் 150 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் கடந்த 2 தினங்களுக்கு முன்பு புதிதாக யாரையும் சேர்த்துக்கொள்ள இயலாதென மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துவிட்டது.
இதையடுத்து, புதுக்கோட்டை முத்துலெட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவமனை கரோனா வார்டில் சுமார் 80 பேர் அனுமதிக்கப்பட்டனர். இரு இடங்களிலும் இதற்கும் மேல் யாரையும் சேர்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்களும் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
எனவே, அவசர நடவடிக்கையாக புதுக்கோட்டை புறநகர் பகுதியில் விசாலமான கட்டிடங்களில் ஒருங்கிணைந்த சிகிச்சை வசதிகளுடன் நூற்றுக்கணக்கான படுக்கைகளைக் கொண்ட கரோனா வார்டுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கவிவர்மன் கூறும்போது, "மாவட்டத்தில் கரோனா பாதிப்பின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் கடுமையான அச்சத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
அதேசமயம், படுக்கை வசதிகள் போதுமானதாக இல்லை. அதிலும், ராணியார் அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் கழிப்பறைகள் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை. குடிநீர் பற்றாக்குறை நிலவுவதோடு, சிகிச்சையிலும் மருத்துவர்கள் அலட்சியம் காட்டுகின்றனர். இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும்.
மேலும், ஓரிரு நாட்களுக்குள் புதுக்கோட்டை சுற்று வட்டாரத்தில் புதிய இடங்களில் கூடுதல் படுக்கைகளைக் கொண்ட கரோனா வார்டுகளை ஏற்படுத்த வேண்டும். இதையே கட்சி சார்பில் இன்று (ஜூலை 19) நடைபெற்ற கரோனா தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளும் தெரிவித்தனர்" என்றார்.
புதுக்கோட்டை ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி கூறுகையில், "மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சுமார் 1,500 படுக்கைகள் உள்ளன. விரைவில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 5,000 படுக்கைகள் ஏற்படுத்தப்பட உள்ளது" என்றார்.