

கரோனா காலத்தால் கோயில்களில் ஆடித்திருவிழாக்கள் ரத்தானதால் அதற்காக பயிரிட்ட கொய்யாவை வியாபாரிகள் வாங்காததால் மரத்திலேயே வீணாகி கீழே விழுபவை கால்நடைகளுக்கு உணவாகி வருகின்றன.
கரோனா தொற்றால் புதுச்சேரி, தமிழகத்தில் ஆடித்திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகம், புதுச்சேரியில் அம்மன் வழிபாட்டில் முக்கியமான ஆடி மாதத்தில் பெரும்பாலானோர் வீடுகளிலும், கோயில்களிலும் வழிபாடு நடத்துவது வழக்கம். இம்முறை கரோனாவால் அதற்கு தடை ஏற்பட்டுள்ளது.
ஆடித்திருவிழாக்கள் பிரசித்தம் என்பதால் புதுச்சேரியில் திருவிழாக்களில் விற்க கொய்யாவை 50 ஏக்கரில் பயிரிட்டிருந்தனர்.
குறிப்பாக, புதுச்சேரி கிராம பகுதிகளான மண்ணாடிப்பட்டு, திருக்கனூர், கூனிச்சம்பட்டு, காட்டேரிக்குப்பம், செல்லிப்பட்டு பகுதிகளில் அதிகளவு கொய்யா பயிரிடப்பட்டது. கரோனா பாதிப்பால், கொய்யாவை வாங்க வியாபாரிகள் வரவில்லை.
இதுதொடர்பாக புதுச்சேரி கிராம கொய்யா விவசாயிகள் கூறுகையில், "ஆடி திருவிழாவில் கொய்யா விற்பனை அதிகளவில் தமிழகம், புதுச்சேரியில் இருக்கும். அதற்காக கொய்யா பயிரிட்டோம். இம்முறை திருவிழா ரத்தால் யாரும் கொய்யா வாங்க வரவில்லை. பழங்களையும் நாங்கள் பறித்தால் கட்டுப்படியாகாது. மரத்திலேயே பழுத்து கீழே விழும் சூழல்தான் உள்ளது.
மாடுகள், ஆடுகள், கால்நடைகள் சாப்பிட்டாலும் அதிக அளவில் கீழே விழுந்த பழங்கள் சிதறி கிடக்கின்றன. . மாற்று பயிருக்கும் தற்போது எங்களால் செல்ல முடியவில்லை. அரசு நிவாரணம் தந்தால் பயனாக இருக்கும். வாழ்வாதாரமில்லாமல் இருக்கிறோம். மரங்களில் உள்ள பழங்களை பறவைகள் சாப்பிட்டும் வீணாகத்தான் போகிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை" என்று வருத்தத்துடன் குறிப்பிடுகின்றனர்.