வெளிநாடுகளில் இறந்த தமிழர்களின் உடலை தமிழகத்திற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்; வெளியுறவுத்துறை அமைச்சருக்கு வைகோ கடிதம்

வைகோ: கோப்புப்படம்
வைகோ: கோப்புப்படம்
Updated on
1 min read

வெளிநாடுகளில் இறந்த தமிழர்களின் உடலை தமிழகத்திற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று (ஜூலை 19) வைகோ எழுதிய கடிதம்:

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

"தென்காசி மாவட்டம், கீழ்கடையம் புலவனூரைச் சேர்ந்த பொன்னுதுரை, மேற்கு ஆப்பிரிக்காவின் சியர்ரா லியோன் நாட்டில், மின்கோபுரங்கள் அமைக்கும் பணியில் வேலை பார்த்து வந்தார். பணிகள் சரிவர நடக்கவில்லை எனக்கூறி, நிறுவனத்திற்கும், பொன்னுதுரை மற்றும் அவரைச் சார்ந்த தொழிலாளர்களுக்கும் இடையில் பிரச்சினைகள் இருந்தன.

இந்த நிலையில், அவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி, அவரது மனைவி மெர்சி லில்லிக்குக் கிடைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கணவரின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வந்து பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து இருந்தார்.

விருதுநகர் மாவட்டம் - வெம்பக்கோட்டை, ஆண்டியாபுரம் ஜெகவீரன்பட்டியைச் சேர்ந்த கனகராஜ், மலேசியாவின் ஜொகூர் பாருவில் வேலை பார்த்து வந்தார். சிறுநீரகக் கோளாறால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார்.

மேற்கண்ட இருவரது உடல்களையும் தமிழகத்திற்குக் கொண்டு வந்து சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்"

இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த நாடுகளில் உள்ள தூதரகங்களுக்கும் இதுகுறித்து வைகோ தகவல் தெரிவித்து உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in