

கரோனா தொற்று அதிகரிப்பால் புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில் முதல்முறையாக இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
புதுச்சேரியில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்கள் உள்ளன. இதில் ஆந்திரம் அருகேயுள்ள ஏனாமில் கடந்த 3 நாட்களில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. தற்போது 63 பேர் வரை கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதால், ஏனாம் நிர்வாகம் கரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை இன்று (ஜூலை 19) முதல் முறையாக அமல்படுத்தியது.
இன்று காலை 6 மணி முதல் நாளை (ஜூலை 20) காலை 6 மணி வரை ஊரடங்கு முழுமையாக நடைமுறையில் இருக்கும்.
ஏனாமில் முக்கிய சாலைகள், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், சாவித்ரி நகர், பைபாஸ் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஐந்து சோதனைச்சாவடிகளை காவல்துறையினர் அமைத்துள்ளனர்.
காவல்துறை தரப்பில் கூறுகையில், "வெளிநபர்கள் உள்ளே வரவும், உள்ளூர் ஆட்கள் வீட்டில் இருந்து வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காவல்துறையைச் சேர்ந்த 80 பேர், 24 மணி நேரமும் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அத்தியாவசியமான மருந்துக்கடைகளும், பால் பூத்களும் திறந்துள்ளன" என்று தெரிவித்தனர்.
அரசு அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "காக்கிநாடாவில் இருந்து ஏனாமில் கரோனா பரவல் அதிகமாகியுள்ளது. அதனால் புதுச்சேரியில் உள்ள 4 பிராந்தியங்களில் முதல் முறையாக இங்கு முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளோம். வரும் ஞாயிறும் இதை தொடர முடிவு எடுத்துள்ளோம்" என்றனர்.