

கந்த சஷ்டி கவசம் பற்றி வெளியான அவதூறு வீடியோவின் தொகுப்பாளர் சுரேந்தர், இ-பாஸ் இல்லாமல் புதுச்சேரி வந்தது தொடங்கி சரண் அடையும் போது முகக்கவசம் அணியாமல் கூட்டத்தைக் கூட்டியது, பேரிடர் மேலாண்மை சட்டத்தை மீறியது உட்பட 5 பிரிவுகளில் புதுச்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
'கருப்பர் கூட்டம்' என்ற யூ டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியான பதிவு இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக உட்பட பல்வேறு தரப்புகளின் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து, இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, யூ டியூப் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், அந்த சேனலை சேர்ந்த தொகுப்பாளர் சுரேந்தர் அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரை தமிழக காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அவரை வரும் ஜூலை 30 வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இச்சூழலில் கிராம நிர்வாக அலுவலர் செல்வி அளித்த புகாரின் பேரில் சுரேந்தர் மீது ஐந்து பிரிவுகளில் புதுச்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதில் இ-பாஸ் இல்லாமல் புதுச்சேரிக்கு வந்தது, அரியாங்குப்பம் பகுதியில் அனுமதியின்றி கூட்டம் கூட்டியது, முகக்கவசம் அணியாமல் தனிமனித இடைவெளியின்றி இருந்தது, கரோனா தொற்றுடைய காலத்தில் பேரிடர் மேலாண்மை சட்டத்தை மீறியது உள்ளிட்டவை தொடர்பாக ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.