

டி.என்.பி.எஸ்.சி (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கு ‘டேஷ் போர்டு’ எனப்படும் புதிய இணைய வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சுகாதாரத் துறையின் கீழ் உள்ள 89 தாய் சேய் நல அலுவலர் பொறுப்புகளுக்கு நேற்று தேர்வு நடந்தது. இந்த பணிக்கான தேர்வு முதல் முறையாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் 40 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. சென்னையில் 21 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வை பார்வையிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:
தேர்வுகளின் முடிவுகளை விரைவாக அறிந்துகொள்ளவும், சான்றிதழ் சரிபார்ப்பின்போது காலதாமதத்தை தவிர்க்கவும் ‘டேஷ் போர்டு’ என்ற புதிய இணையத் திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தில் விண்ணப்பதாரர் ஒவ்வொருவருக்கும் தனியாக ஒரு ஐடி மற்றும் கடவுச்சொல் கொடுக்கப்படும். அவர்களுக்கான இணைய பக்கத்தில் அவர்கள் தங்களது கல்வி, சாதி சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துகொள்ளலாம். அவர்களது பெயர், வயது, முகவரி உள்ளிட்ட அடிப்படை தகவல்களும் பதிவிடப்படும்.
www.tnpsc.net என்ற இணையதளத்தில் இவ்வசதியை ஏற்படுத்தித் தர பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பின் போது காலதாமதத்தை தவிர்க்கலாம். எதிர்காலத்தில் நேரடி சான்றிதழ் சரிபார்ப்பே தேவை இருக்காது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 3 முறை இலவசமாகவும், முன்னாள் ராணுவ வீரர்கள் 2 முறை இலவசமாகவும் தேர்வுகள் எழுத முடியும். அவர்கள் எத்தனை முறை தேர்வுகள் எழுதியுள்ளனர் என்பதை சரியாக அறிந்து கொண்டு நீதிமன்ற வழக்குகளை தவிர்க்கவும் இத்திட்டம் பயன்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.