குமரியில் தேர்ச்சி குறைந்த பள்ளி தலைமையாசிரியர்கள் சஸ்பெண்ட்: ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு

குமரியில் தேர்ச்சி குறைந்த பள்ளி தலைமையாசிரியர்கள் சஸ்பெண்ட்: ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு
Updated on
2 min read

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், பாடவாரியாக தேர்ச்சி விகிதம் குறைந்த ஆசிரியர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரணியல் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் லீலாவதி, படந்தாலுமூடு டி.கே.சி. மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) கிருஷ்ணதாஸ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பளுகல் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சசிதரன் தலைமையாசிரியர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதே போல் பாடவாரியாக 60 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி விகிதத்தை கொடுத்த ஆசிரியர்கள் 12 பேர் கண்டறியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின் பேரில் முதன்மை கல்வி அதிகாரி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

ஆசிரியர்கள் எச்சரிக்கை

தேர்ச்சி விகிதம் குறைந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள இச்சம்பவம் கன்னியாகுமரி மாவட்ட கல்வித் துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது அனலை கிளப்பியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொருளாளர் வள்ளிவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டம் 95.14 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாநில அளவில் 6-வது இடம் பெற்றுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு 17-வது இடத்தில் இருந்த தேர்ச்சி விகிதம் இப்போது படிப்படியாக உயர்ந்து 6-வது இடத்துக்கு வந்துள்ளது.

சாதனையும் சோதனையும்

மாநில அளவில் 6 மாணவர்கள் மதிப்பெண் பெற்றுள்ளனர். இச்சாதனைகள் இருந்தபோதும், தேர்ச்சி விகிதத்தை காரணம் காட்டி 3 தலைமையாசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.12 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் தேர்ச்சி விகிதத்தை காரணம் காட்டி இது போல் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆட்சியரின் அறிவுரையின் பெயரில் தான் முதன்மை கல்வி அதிகாரி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது.

இப்பிரச்சினையில் முதல்வர் தலையிட்டு, சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தனியார் பள்ளிகளில் 400 மதிப்பெண்ணுக்கு மேல் வாங்கியவர்களுக்குத் தான் 11-ம் வகுப்பில் சீட் கொடுக்கிறார்கள். ஆனால், அரசு பள்ளிகளில் கல்வியறிவில் பின் தங்கியவர்களையும் அரவணைத்து கற்றுக் கொடுக்கின்றோம்.

இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநரிடம் பேசியிருக்கிறோம். தொடர்ந்து பள்ளி கல்வி செயலாளரையும் சந்திக்க இருக்கிறோம். உரிய நீதி கிடைக்கவில்லையென்றால் போராட்டம் நடத்துவோம் என்றார் அவர்.

மறுதேர்வில் விமோச்சனம்?

கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இரணியல் பள்ளியில் மட்டும் 56 மாணவர்கள் தோல்வியடைந்தி ருக்கிறார்கள். இதே போல் உள்ள பள்ளிகளை தர வரிசைப்படுத்தித் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மாணவர்களுக்கு இணையான, போதிய ஆசிரியர்கள் கிடையாது.

ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் மாணவர் விகிதாச்சாரத்துக்கும் கூடுதலான ஆசிரியர்களே உள்ளனர். இருந்தும் தேர்ச்சி விழுக்காட்டில் பின்னுக்கு சென்றிருக்கிறது.

தற்போது, போராட்டம், ஆர்ட்ப்பாட்டம் என முறுக்கிக் கொண்டு நிற்கும் ஆசிரியர்கள் ஜூன் மாதம் நடைபெறும் மறுதேர்வுக்கு மாணவர்களை அழைத்து வகுப்புகள் எடுக்கலாமே? இதே தனியார் பள்ளிகளில் இப்படி ஒரு ரிசல்டை காட்டினால் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்பார்களா? அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிப்பவருக்கும் அரசின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தவும், ஆசிரியர்களுக்கு அதை அறிவுறுத்தவும் தான் இந்த நடவடிக்கை என்றார்.

தலைகீழ் முடிவுகள்: இரணியல் அரசு மேல்நிலைப் பள்ளி கடந்த ஆண்டு 88 சதவீத தேர்ச்சி பெற்றிருந்தது. இந்த ஆண்டு 68 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மதிப்பெண் குறைந்த மாணவர்களை சேர்ந்ததால் தான் இந்த நிலை என்கிறார்கள் அங்குள்ள ஆசிரியர்கள். பளுகல் அரசு பள்ளி தமிழக,கேரள எல்லையோரப் பகுதியில் உள்ளது.

இங்கு மொழிப் பிரச்சினையால் தாய் மொழிக் கல்வியில் மாணவர் தடுமாறியதால், 79 சதவீதமே தேர்ச்சி பெற்றதாக சொல்கின்றார்கள் அப்பள்ளி ஆசிரியர்கள். படந்தாலுமூடு டி.சி.கே. மேல்நிலைப் பள்ளி அரசு உதவி பெறும் தனியார் பள்ளி. இப்பள்ளி 51 சதவீதம் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in