

அரியலூர் மாவட்டத்தில் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக மாவட்ட ஆட்சியர்கள், கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள் என அரசு அதிகாரிகளும், கரோனா பாதிப்பையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க எம்.பி., எம்எல்ஏ என அரசியல் பிரமுகர்களும், தூய்மை பணியை மேற்கொள்ள தூய்மை பணியாளர்களும், வெளி மாநிலங்களிலிருந்து தங்களது சொந்த ஊருக்குத் திரும்புபவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது, அரசு அதிகாரிகள், எம்எல்ஏக்கள் என பலரையும் கரோனா வைரஸ் தொற்றி வருகிறது.
இதே வரிசையில், தற்போது அரியலூர் மாவட்டத்தில் கோட்டாட்சியர், வட்டாட்சியர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல அரியலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய வங்கி பணியாளர்களையும் கரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதனால் மேற்கண்ட பொறுப்புகளை மாற்று அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது.
மேலும், மேற்கண்ட அலுவலர்கள் பல்வேறு இடங்களில் கரோனா ஆய்வு பணிகளில் தற்போது வரை ஈடுபட்டனர். அப்போது மேற்கண்ட அதிகாரிகளுடன் உள்ளாட்சி பிரதிநிதிகளும், வருவாய்த்துறையினர் பலரும் ஆய்வு பணியின் போது உடனிருந்துள்ளனர். இதன் காரணமாக எவ்வளவு பேருக்கு கரோனா தொற்று பரவியிருக்கலாம் என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அதேவேளையில், மேற்கண்ட அலுவலகங்களில் பணிபுரியும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் (ஜூன்) வரை சென்னையிலிருந்து வந்த தொழிலாளர்கள் மற்றும் வெளி மாநிலம், வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு மட்டுமே கரோனா தொற்று இருந்து வந்த நிலையில், ஜூலை மாதத்தில் அரசு அலுவலர்கள் பலருக்கும் கரோனா தொற்று பரவி வருவது மாவட்ட நிர்வாகத்தையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் என அனைத்து இடங்களிலும் நகராட்சி நிர்வாகம் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.