

காரைக்குடி அருகே தங்கக் கட்டியை பாதி விலைக்கு விற்பதாகக் கூறி ரூ.3 கோடி, 500 பவுன் நகைகளை மோசடி செய்த கணவன், மனைவி மீது பாதிக்கப்பட்டோர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த னர்.
காரைக்குடி அருகே பள்ளத்தூரைச் சேர்ந்தவர்கள் மாணிக்கம், கயல்விழி. கணவன், மனைவியான இவர்கள் தங்களிடம் 7 கிலோ தங்கக் கட்டி உள்ளதாகவும், அதை பாதி விலைக்கு விற்பதாகவும் கூறியுள்ளனர். இதை நம்பி காரைக்குடியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள், அவர்களிடம் ரூ.3 கோடி மற்றும் தங்களிடம் இருந்த 500 பவுன் நகைகளைக் கொடுத்துள்ளனர். அதற்கு ஈடாகக் கணவனும், மனைவியும் கையெழுத்திட்ட காசோலை, பத்திரங்களைக் கொடுத்துள்ளனர்.
சில மாதங்கள் கழித்து அவர்களது மோசடி குறித்து பெண்களுக்கு தெரிய வந்தது. அவர்களிடம் பணத்தைக் கேட்டபோது இருவரும் தலை மறைவாயினர்
இது குறித்து தேன்மொழி என்பவர் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட பெண்கள் காரைக்குடி டிஎஸ்பி அருணிடம் நேற்று புகார் செய்தனர்.
இது குறித்து டிஎஸ்பி அருண் கூறுகையில், ‘மோசடி தொகை அதிகமாக இருப்பதால் சிவகங்கை மாவட்டக் குற்றப் பிரிவு மூலம் விசாரிக்கப்படும்’ என்றார்.