

வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்ற நிலையில் தொழிற்சாலைகளின் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்தந்த மாநில அரசுகளுடன் பேசி, தொழிலாளர்களை அழைத்து வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என தமிழக முதல்வரிடம் ஈடிசியா கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரோடு மாவட்ட சிறு தொழில் சங்கத்தின் (ஈடிசியா) தலைவர் வி.சரவணன், செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் முதல்வர் பழனிசாமியிடம் வழங்கிய மனு விவரம்:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில், வடமாநிலத் தொழிலாளர்கள், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வந்தனர்.
கரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடு போன்றவற்றால் வேலை இழந்த தொழிலாளர்கள், இ–பாஸ் பெற்று சொந்த ஊர் சென்றுவிட்டனர். தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால், தொழிற்சாலைகள் செயல்படத் தொடங்கியுள்ளன.
ஆனால், வெளி மாநில தொழிலாளர்கள் திரும்பி வராத நிலையில், தற்போதுள்ள 30 சதவீதம் தொழிலாளர்களை கொண்டு தொழிற்சாலைகளை இயக்க முடியவில்லை. இதனால், உற்பத்தி கடுமையாக பாதித்துள்ளது. தற்போது இ–பாஸ் பெறுதல், ரயில், பேருந்து சேவைகள் நிறுத்தம் போன்ற நடைமுறை சிக்கலால், வடமாநிலத் தொழிலாளர்கள் வேலைக்கு திரும்ப முடியவில்லை.
எனவே, சொந்த ஊருக்குச் சென்ற வெளிமாநிலத் தொழிலாளர் களை மீண்டும் அழைத்து வர, அந்தந்த மாநில அரசுடன் பேசி, தலைமை செயலர் மூலம், அவர்களை மீண்டும் பணிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல, அருகே உள்ள மாவட்டங்களில் இருந்தும் தொழிலாளர்கள் பணிக்கு வந்து செல்ல, இ–பாஸ், ஒர்க்கிங் பாஸ் போன்றவை பெறுவதில் சிக்கல் இருக்கிறது.
இம்முறைகளை ரத்து செய்து, எளிமையான முறையில் அனுமதி பெற்று, தொழிலாளர்கள் பணிக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளனர்.