

கடந்த 2012-ம் ஆண்டு சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை படித்தபோது, 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் 4 லட்சத்துக்கு மேல் மக்கள்தொகை கொண்ட தாலுகாக்களை கண்டறிந்து, புதிய தாலுகாக்கள் தோற்றுவிக்கப்படும் என அறிவித்தார்.
அதன்பிறகு 2012 ஜூன் 15-ம் தேதி அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதில், மாவட்ட ஆட்சியர்களால் அனுப்பப்படும் பரிந்துரைகளை வருவாய் நிர்வாக ஆணையர், நில நிர்வாக ஆணையர் மற்றும் நிலச்சீர்திருத்த ஆணையர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு ஆய்வு செய்து அனுப்பும் அறிக்கையின் அடிப்படையில் புதிய தாலுகாக்கள் உருவாக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் 2012-13ம் ஆண்டில் 9 தாலுகாக்களும், 2013-14ம் ஆண்டில் சென்னையில் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அம்பத்தூர் உள்ளிட்ட 7 தாலுகாக்களை பிரித்து புதிதாக 7 தாலுகாக்கள் உருவாக்கப்பட்டன. மேலும், மதுரை, கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சேர்த்து 25 புதிய தாலுகாக்கள் உருவாக்கப்பட்டன. கடந்த ஆண்டு நீலகிரி மாவட்டம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் புதிய தாலுகாக்கள் உருவாக்கப்பட்டன. தற்போது 16 புதிய தாலுகாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புதிய தாலுகா உருவாக்கப்படுவதால், நலத்திட்ட உதவிகளுக்காக விண்ணப்பிக்கவும் வருவாய்த் துறையில் ஜாதி, வருவாய் உள்ளிட்ட சான்றுகளை பெறவும் பல கி.மீ. தொலைவுக்கு மக்கள் அலைவது தவிர்க்கப்படும். இதனால், பணம் மற்றும் கால விரயம் தவிர்க்கப்படும்.