

சிவகங்கை அருகே தமறாக்கியில் ரூ.14.50 கோடியில் உப்பாற்றை சீரமைத்து புதிய தடுப்பணை கட்டுதல், 7 தடுப்பணைகள் சீரமைத்தல் உள்ளிட்ட பணிக்கான பூமிபூஜை கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தலைமையில் நடந்தது.
உப்பாறு மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலையில் உற்பத்தியாகி ஓடையாக மேலூர், திருவாதவூர் வழியாக சிவகங்கை மாவட்டம் தமறாக்கி ஆலங்குடி கண்மாயை அடைகிறது.
அங்கிருந்து உப்பாறு விரிந்து 40 கி.மீ பாய்ந்து முருகபாஞ்சான் அருகே வைகையாற்றில் கலக்கிறது. இந்த ஆறு மூலம் 72 கண்மாய்கள் பயன் பெறுகின்றன. இதன்மூலம் 22,628 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.
மேலும் ஆற்றின் குறுக்கே 7 தடுப்பணைகள் கட்டப்பட்டு நேரடியாக 12 கண்மாய்கள் பயன்பெறுகின்றன. தற்போது அந்த தடுப்பணைகள் சேதமடைந்துள்ளன. இதையடுத்து ஆற்றை தூர்வாருதல், 7 தடுப்பணைகள் சீரமைத்தல், தமறாக்கியில் புதிதாக தடுப்பணை கட்டுதல் போன்ற பணிக்காக ரூ.14.50 கோடி ஒதுக்கப்பட்டது.
இப்பணிக்கான பூமிபூஜை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தலைமையில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், சருகணியாறு வடிநிலக்கோட்ட சிறப்பு தலைமை பொறியாளர் ஞானசேகரன், செயற்பொறியாளர் சொர்ணகுமார், உதவி செயற்பொறியாளர் மலர்விழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இப்பணிகள் அனைத்தும் மூன்று மாதங்களுக்குள் முடியும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.