Published : 18 Jul 2020 05:56 PM
Last Updated : 18 Jul 2020 05:56 PM

வேலூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் கரோனா: நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் கடைகள் திறக்க புதிய கட்டுப்பாடுகள்; ஆட்சியர் உத்தரவு

வேலூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சி மற்றும் பள்ளிகொண்டா பேரூராட்சிப் பகுதிகளில் மட்டும் கடைகள் திறக்க புதிய நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஜூலை 17) வரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,628 ஆக உள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இதுவரை 56 ஆயிரத்து 542 பேருக்குப் பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. கரோனா பாதிப்பால் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

நிரம்பும் மருத்துமனைகள்

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 529 பேர், சிஎம்சியில் 673 பேர், அரசு பென்ட்லெண்ட் மருத்துவமனையில் 181 பேர், இஎஸ்ஐ மருத்துவமனையில் 58 பேர், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் 109 பேர், தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரியில் உள்ள கரோனா பராமரிப்பு மையத்தில் 111 பேர், ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள பராமரிப்பு மையத்தில் 61 பேர், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட 39 பேர் என மொத்தம் 1,761 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நகராட்சிகளில் பாதிப்பு

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு நகராட்சி, பள்ளிகொண்டா பேரூராட்சிப் பகுதியில் கடந்த 10 நாட்களாக கரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வரும் நாட்களிலும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, குடியாத்தம் நகராட்சியில் கடந்த 10 நாட்களாக கரோனா பாதிப்பு சராசரியாக 50 என்ற எண்ணிக்கையில் உள்ளது.

புதிய கட்டுப்பாடுகள்

வேலூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கடைகள் திறப்பு தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (ஜூலை 18) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகள், பள்ளிகொண்டா பேரூராட்சியில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் திங்கள்கிழமை (ஜூலை 20) முதல் மருந்துக் கடைகள், பெட்ரோல் நிலையங்கள் தவிர்த்து அனைத்து வகையான கடைகளும் காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டும் இயங்க வேண்டும்.

இந்த உத்தரவு மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள், நகைக்கடைகள், பேக்கரி, ஹோட்டல்கள், தேநீர் கடைகள், துணிக்கடைகள், ஹார்டுவேர் கடைகள் என அனைத்துக் கடைகளுக்கும் பொருந்தும். மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள அனைத்து வகையான கடைகளுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தாது" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x