

மதுரை மாவட்டத்தில் சுமார் 120 தனியார் மருத்துவமனைகள் மூடி வைக்கப்பட்டு நோயாளிகள் பார்ப்பதைத் தவிர்ப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் இந்த மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் டிஜி.வினய் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் ‘கரோனா’ தீவிரமாக பரவத்தொடங்கியதும் தனியார் மருத்துவமனைகள் பல திறந்து வைக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலும் வெளி நோயாளிகள், உள் நோயாளிகளுக்கான சிகிச்சை மேற்கொள்ளவில்லை.
பெரிய மருத்துவமனைகளில் முக்கிய உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள் மட்டுமே நடந்தப்படுகின்றன. சிறிய மருத்துவமனைகள், கிளினிக்குகள் பல மூடப்பட்டன. அப்படியே திறந்து வைக்கப்பட்டிருந்தாலும் நோயாளிகள் பார்ப்பதை தவிர்த்தனர்.
அதனால், ‘கரோனா’ வை தவிர்த்து மற்ற நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். பலர் சிகிச்சை கிடைக்காமல் பரிதாபமாக இறந்தும் உள்ளனர். அரசு மருத்துவமனைகளில் ‘கரோனா’ தொற்று பரவிவிடக்கூடுமோ என்ற அச்சத்தில் நோயாளிகள் வீடுகளில கை வைத்தியம் பார்க்கும்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம், மூடப்பட்ட தனியார் மருத்துவமனைகளை கணக்கெடுத்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டிஜி.வினய் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியா முழுவதும் ‘கரோனா’ தொற்றை தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதில் முக்கிய நடவடிக்கையாக அனைத்து தனியார் மருத்துவமனைகள் நர்ஸிங் ஹோம் மற்றும் சிறிய கிளினிக்குகள் அனைத்தையும் மூடி வைக்காமல் செயல்படுத்த வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், மதுரை மாவட்டத்தில் சுமார் 120 தனியார் மருத்துவமனைகள் மூடி வைக்கப்பட்டு நோயாளிகள் பார்ப்பதை தவிர்ப்பதாக கடந்த 15ம் தேதி நடத்தப்பட்ட கள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உரிய காரணம் இல்லாமல் மூடப்பட்ட தனியார் மருத்துவமனைகளிடம் விளக்கம் கோரப்பட்டு தக்க நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஏனவே, அனைத்து மருத்துவமனைகள், கிளினிக்குகள் திறக்கப்பட்டு செயல்பட வேண்டும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்தார்