

கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள திருமண அமைப்பாளர்கள் சங்கத்தினர் நிவாரணம் கோரிய மனுவை பரிசீலித்து 6 வாரத்தில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா தொற்றின் காரணமாக மார்ச் 24-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் திருமண நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. அதனால் பொதுமக்கள் பெரும்பாலானோர் திருமண திட்டங்களை ஒத்திவைத்து வருகின்றனர். இதனால் பெருமளவில் மேரேஜ் புரோக்கர்ஸ் என்று சொல்லக்கூடிய திருமண அமைப்பாளர்களின் தொழில் முழுவதுமாக முடங்கியுள்ளது.
இந்நிலையில் வருமானம் இல்லாமல் தவிக்கும் தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு தகுந்த நிவாரணம் கோரி தமிழக அரசிடம் தென்னிந்திய திருமண அமைப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அந்த மனு மீது இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அமைப்பாளர்கள் தரப்பில் வழக்கறிஞர் எழில்ராஜ் ஆஜராகி வருமானம் இல்லாமல் இருக்கும் தங்களுக்கு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டுமென்று ஏப்ரல் 20-ம் தேதி மனு கொடுத்தும் இதுவரை எந்த முடிவெடுக்கவில்லை என தெரிவித்தார்.
அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆர்.விஜயக்குமார் ஆஜராகி, திருமண அமைப்பாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து இதுவதை எந்த திட்டமும் இல்லை என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி ரவிச்சந்திரபாபு பிறப்பித்த உத்தரவில், திருமண அமைப்பாளர்களை உறுப்பினர்கள் கொண்ட சங்கம் கொடுத்த மனுவை, தமிழக அரசு சட்டத்திற்குட்பட்டு உரிய முறையில் பரிசீலித்து 6 வாரத்தில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.