நீலகிரி மலையை அழிக்க அனுமதிக்கக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த பள்ளி மாணவி

பள்ளி மாணவி காவ்யா
பள்ளி மாணவி காவ்யா
Updated on
2 min read

மேற்குத்தொடர்ச்சி மலையைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார், நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த பள்ளி மாணவி காவ்யா.

உலகில் பல்லுயிர்ச்சூழல் வளம் மிகுந்த எட்டு இடங்களில் மேற்குத்தொடர்ச்சி மலையும் ஒன்று. இந்த மலைத்தொடர்கள் சுமார் 5,000 வகையான பூக்கும் தாவரங்கள், 139 வகை பாலூட்டிகள், 508 வகைப் பறவைகள் எனப் பல்லுயிர்களின் புகலிடமாக உள்ளது.

இந்த மலைத்தொடர்களில் உள்ள நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம், உலகப் பாரம்பரியமிக்க இடங்களுள் ஒன்றாக 1986-ம் ஆண்டு யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.

குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, கோவா, கர்நாடகம் எனப் பரந்து விரிந்து காணப்படும் சிறப்பு வாய்ந்த இந்த மலைத்தொடரில் வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் மனிதச் செயல்களால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக மலை சிதைவதாக ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர். மேலும், இந்த மலைத்தொடரை அழிவுப் பாதையில் இருந்து மீட்டுப் பாதுகாக்க ஆய்வாளர்களும், காட்டுயிர் ஆர்வலர்களும், தன்னார்வ அமைப்புகளும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

மேற்குத்தொடர்ச்சி மலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்து, தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தார் பேராசிரியர் மாதவ் காட்கில். இவரின் பரிந்துரையை மாநிலங்கள் பின்பற்ற வலியுறுத்தி நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த பள்ளி மாணவி காவ்யா உட்பட 26 பேர் கொண்ட குழு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

மாணவி காவ்யா இதுதொடர்பாக கூறும் போது, "நீலகிரி மாவட்டம் குன்னூரில் வாழ்ந்துவரும் எனக்கு சிறுவயது முதலே காடுகள் மீதும் காட்டுயிர் மீதும் ஆர்வம். சுற்றுச்சூழல் தொடர்பாக நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வேன். அங்கு விவாதிக்கப்படும் விஷயங்கள் கவலை அளிப்பதாக உள்ளன. அழகான ஒரு மலையை அழிக்கிறோமே என கஷ்டமாக இருக்கிறது.

நீலகிரி என்று சொன்னாலே சுற்றுலாத் தலம் என மக்கள் நினைக்கின்றனர். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிற சுற்றுலாவாக இருக்க வேண்டும்.

ஒரு லட்சத்துக்கு 29 ஆயிரத்து 37 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மேற்குத்தொடர்ச்சி மலையில் எந்தப் புதிய திட்டமும் கொண்டு வரக் கூடாது. சிவப்பு மண்டலத் தொழிற்சாலைகள் அமைக்கக்கூடாது. ஆனால், முறையான வழிகாட்டுதலை யாரும் பின்பற்றவில்லை.

வளர்ச்சி என்ற பெயரில் நாம் இயற்கை வளத்தை அழித்து வாழ்ந்து சென்று விட்டோம் என்றால் எதிர்காலச் சந்ததியினருக்கு எதுவும் இருக்காது.

மேற்குத்தொடர்ச்சி மலைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய, மத்திய அரசு பேராசிரியர் மாதவ் காட்கில் தலைமையில் ஒரு குழுவை 2010-ல் அமைத்தது. இந்தக் குழு தன்னுடைய அறிக்கையை 2011 ஆகஸ்ட் மாதம் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் உள்ள வழிமுறையை அந்தந்த மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும். ஆனால் யாரும் பின்பற்றவில்லை.

இதை வலியுறுத்தி தமிழகத்தின் பல மாவட்டம், மாநிலத்தைச் சேர்ந்த 27 பேர் கொண்ட குழு 'ஓசை' அமைப்பின் முயற்சியால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம். இதன் மூலமாக நல்ல முடிவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in