பெரியார் சிலை அவமதிப்பு: பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது; கமல் கருத்து

கமல்ஹாசன்: கோப்புப்படம்
கமல்ஹாசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவை சுந்தராபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பெரியாரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று (ஜூலை 17) அதிகாலை அந்தச் சிலை மீது காவி நிறச் சாயம் பூசப்பட்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்து திராவிடர் கழகத்தினர் மற்றும் பல்வேறு கட்சியினர் அங்கு திரண்டனர். காவல்துறையினரும் அங்கு குவிக்கப்பட்டனர். சிலையில் இருந்த காவி நிறச் சாயம் அழிக்கப்பட்டு, சிலை தூய்மைப்படுத்தப்பட்டது.

இச்சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை பாரத் சேனா என்ற அமைப்பைச் சேர்ந்த அருண் கிருஷ்ணன் (21) என்ற இளைஞர் இச்சம்பவத்திற்குப் பொறுப்பேற்று காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

இது தொடர்பாக, கமல்ஹாசன் இன்று (ஜூலை 18) தன் ட்விட்டர் பக்கத்தில், "தன் நம்பிக்கைகளை பிறர் மேல் திணிக்காமல், பிறரைக் காயப்படுத்தாது இயைந்து வாழும் சமூகம்தான் அறிவார்ந்த, மேம்பட்ட சமூகம். இன்று நம்பிக்கைகளின் பெயரால் நடக்கும் வெறுப்பு அரசியலும், பிரிவினைவாதமும் நம் அடையாளமல்ல. பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது" எனப் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in