

ஆயிரம்விளக்கில் 8 மாடி கட்டிடத்தில் தீ பிடித்ததில் 17 துப்புரவு தொழிலாளர்கள் புகை மூட்டத்தில் சிக்கினர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் 8 மாடி கொண்ட வணிக வளாகம் உள்ளது. இந்த கட்டிடத்தில் ஏராளமான கடைகள், வங்கி, ஐ.டி. நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. நேற்று காலையில் முதல் மாடியில் உள்ள நிறுவனத்தில் பணிக்கு வந்த ஊழியர் கள் ஏ.சி.யை ஆன் செய்தனர். அப்போது திடீரென தீப்பிடித்து கரும்புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் இந்த புகை கட்டிடம் முழுவதும் பரவியது. வணிக வளாகத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 15 க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் புகை மூட்டத்தில் சிக்கிக் கொண்டனர். பயந்து போன அவர்கள் மொட்டை மாடியில் ஏறி தஞ்சம் அடைந்தனர்.
தகவல் கிடைத்ததும் ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டையில் இருந்து 4 தீயணைப்பு வாகனங் களில் 30 தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணி யில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேர போராட்டத் துக்கு பிறகு கட்டிடத்தில் பரவிய புகை மூட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீயும் அணைக்கப்பட்டது. இதற் கிடையே ஸ்கை லிப்ட் வரவழைக்கப்பட்டு மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்த 17 தொழிலாளர்களில் 12 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். 5 தொழிலாளர்களை மாடிப்படி வழியாக மீட்டு அழைத்து வந்தனர்.
புகை மூட்டத்தில் சிக்கிய தனலட்சுமி என்ற துப்புரவு தொழிலாளி மயக்கமடைந்தார். அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆயிரம்விளக்கு போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.