

கந்த சஷ்டியை அவமதித்த கருப்பர் கூட்டத்தின் செயலை திமுக எதிர்க்கும் நிலையில், இந்துக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்க ஸ்டாலின் பெயரில் போலி ட்விட்டர் கணக்கைத் தொடங்கி கருப்பர் கூட்டத்தை ஆதரிப்பதுபோல் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். இதைச் சட்ட ரீதியாகச் சந்திப்போம் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
"சமீபகாலமாக திமுக மீதும் தலைவர் ஸ்டாலின் மீதும் தவறான பிரச்சாரங்களைச் செய்வதற்குத் திட்டமிட்டு ஒரு கூட்டம் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. மக்கள் மத்தியில் திமுக தலைவருக்குப் பெருகிவரும் ஆதரவைப் பொறுக்காதவர்கள், தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் திட்டமிட்டு இவ்வாறு விஷமத்தனமான பிரச்சாரங்களைச் செய்து வருகின்றனர்.
அதில் ஒன்றாக நேற்றைய தினம், திமுக தலைவர் மீது, அவர் பெயரில் போலியான ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அதில் முருகனை இழிவுபடுத்திப் பேசியுள்ள கருப்பர் கூட்டத்திற்கு கருப்பர் கூட்டத்துக்கு திமுக ஆதரவு தெரிவிக்கும் என்று ஒரு போலியான தகவலை ஸ்டாலின் பெயரில் போலியாகப் பதிவிட்டுள்ளனர். இதனை திமுக வன்மையாகக் கண்டிக்கிறது.
இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டவர்கள் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைமிலும் புகார் அளித்துள்ளோம். ஆனால், அதன்பேரில் எந்தவித சட்ட நடவடிக்கையும் இல்லை. முருகனைப் பழித்துப் பேசியது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என்பது திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளின் நிலைப்பாடாகும். அதையேதான் திமுக தலைவரும் கண்டித்துள்ளார்.
நிலைமை இப்படி இருக்க தேர்தல் வருவதற்கு சில மாதங்கள் இருக்கும் நிலையில், அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இருக்கின்ற இந்து, கிறித்தவ, முஸ்லிம் என அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்கள் ஸ்டாலின் பின்னால் இருப்பதை மத்திய அரசின் உளவுத்துறை வாயிலாக அவர்கள் அறிந்துகொண்டு, இந்துக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை உண்டுபண்ண, திட்டமிட்டே இதுபோன்ற குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.
அவர்களுக்கு நான் சொல்வது, திமுகவை உருவாக்கிய அண்ணா கூறியதுபோல் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற கொள்கையின் அடிப்படையில் 70 ஆண்டுகாலம் திமுக பணியாற்றி வந்துள்ளது. எங்களை வழிநடத்திய தலைவர் கலைஞர் 50 ஆண்டு காலம் திமுகவுக்குத் தலைமையேற்று 5 முறை முதல்வராக இருந்த காலத்தில் தமிழ்நாட்டில் இந்து கோயில்கள் பாதுகாக்கப்பட்டன.
சொல்லப்போனால் 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதன்முதலில் நடத்தியது 1968 பிப்ரவரியில் கும்பகோணம் மகாமகம். இன்று அரசியலில் உள்ள சிறியவர்களுக்கு, புதிதாக அரசியலுக்கு வந்தவர்களுக்கு இது தெரியாது. தமிழ்நாட்டில் பல கோயில்களைச் சீரமைத்துள்ளது திமுக ஆட்சி. ஓடாத திருவாரூர் தேரை ஓடவைத்தவர் கலைஞர். மயிலாப்பூர் குளத்தைச் சீரமைக்க, தானே குளத்தில் இறங்கி சீரமைத்தவர் கலைஞர். அந்த வகையில் திமுக மதச்சார்பற்ற நிலையில் பணியாற்றும் ஒரு இயக்கம்.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலை திங்கட்கிழமை திமுக சட்டத்துறை சார்பில் சந்தித்துப் புகார் அளிக்க உள்ளோம். இல்லையென்றால் திமுக நீதிமன்றத்தை நாடத் தயாராக உள்ளது.
மின்கட்டண உயர்வை எதிர்த்து திமுக நடத்தும் போராட்டம் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து நடத்தவில்லை. மின் கட்டண உயர்வை எதிர்த்துப் போராட்டம் நடத்துகிறோம். மற்ற மாநிலங்களில் மின் கட்டணத்தில் சலுகை அளித்துள்ளனர். ஆகவே அமைச்சர் பாண்டியராஜன் சொல்வதுபோல் இது நீதிமன்ற அவமதிப்பாகாது. அமைச்சர் பாண்டியராஜனுக்கு ஒன்றை நினைவுபடுத்த உள்ளோம்.
முதன்முதலில் சமூக நீதி அரசாணையை எதிர்த்து முதன்முதலில் தமிழகத்தில் நீதிமன்றம் சென்றபோது அதை எதிர்த்துத்தான் தீர்ப்பு வந்தது. போராடி வெற்றி பெற்று 70 ஆண்டு காலமாக அமைச்சர் பாண்டியராஜன் உட்பட பலரும் சமூக நீதி அரசாணையை திமுக எதிர்த்து நடத்திய போராட்டம் மூலமாகத்தான் பட்டதாரிகளாக வந்துள்ளனர். அது திமுகவும், திராவிட இயக்கமும் நடத்திய போராட்டத்தின் காரணமாகத்தான் என்பதை அவர் தெரிந்துகொள்ள வேண்டும்.
மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி இட ஒதுக்கீடு தரமாட்டோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளதை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ள காரணத்தால், திமுகவே அந்த வழக்கைத் தொடர்ந்ததாலும் அதுகுறித்து கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. தீர்ப்பு நல்ல தீர்ப்பாக வரும்.
நீதிமன்றத்தை நாடும் முன் மக்கள் மன்றத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். குள்ளநரிக் கூட்டம் தமிழகத்தில் நுழைய உள்ளது. தமிழகத்தில் 100க்கு 100 சதவீதம் காவிக்கூட்டத்தை விரட்டியடித்தவர்கள். எனவே குறுக்குவழியில் நுழைய திமுக கூட்டணிக்கட்சிகள் அனுமதிக்காது".
இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி பேசினார்.