

மதுரையில் இதுவரை 4 பேர் பிளாஸ்மா சிகிச்சையால் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னையை அடுத்த மதுரை, விருதுநகர், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கரோனா தீவிரமடைந்து வருகிறது. மதுரையில் குறிப்பாக கரோனா தொற்று 8,000-ஐ கடந்துள்ளது.
இந்நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மதுரைக்கு வருகை தந்துள்ளார்.
மதுரையில் இன்று காலை தொழில் வர்த்தக சங்க கூட்டரங்கில் கரோனா விழிப்புணர்வு கையேட்டை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். அதனை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெற்றுக் கொண்டார். விழாவில், மாவட்ட ஆட்சித் தலைவர் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், சோழவந்தான், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், "மதுரையில் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் செவிலியர்கள் அதிகாரிகள் என அனைத்துத் துறையினரும் மிகச்சிறப்பாக உழைத்து வருகின்றனர்.
மதுரை மருத்துவக் கல்லூரியில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் ஒத்துழைப்போடு கரோனாவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனாவால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு கூட தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் 44 இடங்களில் பிளாஸ்மா சிகிச்சைக்கான இடம் உள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, போன்ற இடங்களில் பிளாஸ்மா சிகிச்சைக்கான அனுமதி உள்ளது. அந்த வகையில் மதுரையில் கரோனா பாதித்தவர்களில் இதுவரை 4 பேர் பிளாஸ்மா சிகிச்சையால் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள கரோனா மருத்துவமனைகளில் சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
அதையும் தாண்டி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பது என்பது அவரவர் விடுப்பம். ஆனால், கடைசி நேரத்தில் நோயாளியை தனியார் மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பக்கூடாது. அதுபோல், தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.